Kanimozhi : வ.உ.சிதம்பரத்தை தெரியாதா.? இந்தா தெரிஞ்சுக்கோங்க.. இந்தி மொழி துணையோடு பதிலடி கொடுத்த கனிமொழி.!

By Asianet TamilFirst Published Jan 22, 2022, 9:18 PM IST
Highlights

உண்மையில் வஉசி யார் என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்ற கேள்வியுடன் வீடியோ தொடங்குகிறது. பின்னர் வ.உ.சி. சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பு வீடியோவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. 

வ.உ.சி. யார் என்பது குறித்து மத்திய அரசு குழுவினருக்கு இந்தி சப் டைட்டிலுடன் வீடியோ வெளியிட்டுள்ளார் திமுக எம்.பி. கனிமொழி.

டெல்லியில் குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழகத்தின் ஊர்தி நிராகரிக்கப்பட்டது. தமிழத்தின் ஊர்தியில் வேலு நாச்சியார். வ.உ.சிதம்பரனார் ஆகியோர் குறித்து தேர்வுக் குழு கேள்வி எழுப்பி, நிராகரித்தது சர்ச்சையானது. மத்திய அரசின் போக்கை கண்டித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார். இதேபோல திமுக உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.  அதன் தொடர்ச்சியாக மத்திய அரசு நிராகரித்த தமிழக ஊர்திகள், சென்னையில் நடைபெறும் குடியரசுத் தின அணிவகுப்பில் இடம்பெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும் தமிழகம் முழுவதும் அந்த ஊர்திகள் காட்சிப்படுத்தப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

 

இந்நிலையில் திமுக எம்.பி.யும் மகளிரணி செயலாளருமான கனிமொழி ட்விட்டர் பதிவை ஒன்றை வெளியிட்டிருந்தார். ‘இதுதான் வ.உ.சிதம்பரனார்’ என்று குறிப்பிட்டிருந்த கனிமொழி, வீடியோ ஒன்றையும் இணைத்திருந்தார். வ.உ.சிதம்பரனார் குறித்த இந்த வீடியோ 160 வினாடிகள் ஓடக்கூடியதாக உள்ளது.  ‘இந்த வீடியோ சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்த் தலைவர்களின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துவதற்காக ஆங்கிலத்தில் மட்டுமே உருவாக்கப்பட்டது, இந்தி வசனங்கள் புரிதலுக்காக உருவாக்கப்பட்டன’ என்று பொறுப்பு துறப்புடன் ஓடுகிறது.  "உண்மையில் வஉசி யார் என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்ற கேள்வியுடன் வீடியோ தொடங்குகிறது. பின்னர் வ.உ.சி. சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பு வீடியோவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள மற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களையும் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

The name is V.O.Chidambaranar. pic.twitter.com/Xi8XgaitQ9

— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK)

இந்த வீடியோவை கனிமொழி வெளியிட்டது தொடர்பாக அவருடைய ஆதரவாளர்கள் கூறுகையில், “சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தலைவர்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவே இந்த வீடியோ உருவாக்கப்பட்டது. புரிந்துகொள்ள வேண்டும் என்று பெரிய அளவில் இந்தி வசனங்களைக் கொண்டுள்ளது. வ.உ.சி. போல வேலு நாச்சியார் பற்றிய வீடியோவும் விரைவில் வெளியாகும். கடந்த காலங்களில், திராவிட இயக்கம் மாநிலம் முழுவதும் தெரு முனை நூலகங்களை நிறுவி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தின. இப்போது சமூக ஊடக யுகம். எனவே, கனிமொழி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். ​​மத்திய தேர்வு குழு, வ.உ.சி.யை ஒரு தொழிலதிபர் என்று கூறி, அவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்று கேட்டுள்ளனர். அதற்கு பதிலாகத்தான் வ.உ.சி.யின் வாழ்க்கையையும் பங்களிப்பையும் தமிழர் அல்லாத பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்ல வீடியோவில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தனர். 
 

click me!