புதுச்சேரியில் ஆட்சியில் அமர திமுக துடிப்பதா..? என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆவேசம்..!

By Asianet TamilFirst Published May 13, 2021, 9:13 PM IST
Highlights

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தவும் ஆட்சியில் அமரவும் திமுக துடிக்கிறது என்று என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக-அதிமுக ஆகிய கட்சிகள்  குற்றம் சாட்டியுள்ளன.
 

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றார். ஆனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, பாஜகவைச் சேர்ந்த மூன்று பேர் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ஆளுங்கூட்டணியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தை வைத்து என்.ஆர். காங்கிரஸுடன் திமுக நெருக்கம் காட்டிவருகிறது. 
இந்நிலையில், புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன், என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயபால், பாஜக பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், “புதுச்சேரியின் நலன், வளர்ச்சியை மையப்படுத்தி, மத்திய அரசோடு இணக்கமாக செயல்பட வேண்டிய அரசு அமைய வேண்டும் என்று என்.ஆர். காங்கிரஸ், அதிமுக, பாஜக கூட்டணி அமைத்தது. எங்கள் கூட்டணி வெற்றி பெற்று, பதவியும் ஏற்றுவிட்டது.
தற்போது மத்திய அரசால் மூன்று எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செய்யப்பட்டதைப் பயன்படுத்தி, தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு ஏற்படுத்தவும் குறுக்கு வழியில் ஆட்சியில் அமரவும் திமுக முயன்று வருகிறது. நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தில் தவறு இருந்தால் அதை நாங்களே பேசி தீர்த்துக்கொள்வோம். அந்த உரிமை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு உள்ளது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து, ஆட்சியை இழந்த திமுக கூட்டணி கட்சிகளுக்கு அந்த உரிமை கிடையாது.
இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தவும், ஆட்சியில் அமரவும் திமுக துடிக்கிறது. தேர்தல் பிரசாரத்தின்போது என்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமியை கடுமையாக விமர்சனம் செய்த திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் முதல்வராக பதவியேற்றுள்ள ரங்கசாமிக்கு அனுசரணையாக பேசுவது நாடகத்தனமாக உள்ளது. திமுகவின் பகல் கனவு என்றைக்கும் பலிக்காது” என்று அவர்கள் கூட்டாகத் தெரிவித்தனர். 
 

click me!