சொற்ப ஓட்டுகளில் வெற்றி பெற்ற திமுக... மிதப்பில் இருந்த திமுகவுக்கு பாடம் தந்த வேலூர் தேர்தல்..!

By Asianet TamilFirst Published Aug 10, 2019, 7:49 AM IST
Highlights

தேர்தல் முடிவு திமுகவுக்கு அதிர்ச்சியையும் சில ஆச்சரியங்களையும் அளித்திருக்கிறது. தொடக்கம் முதலே அதிமுக வேட்பாளர் முன்னிலை வகித்தபோது திமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் ஆடிப்போய்விட்டனர். அதுவும் 7 சுற்றுகள் வரை ஏசி சண்முகம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தபோது, முடிவு அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்ற முடிவுக்கே திமுக நிர்வாகிகள் வந்துவிட்டனர். 

குறைந்தபட்சம் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த திமுகவுக்கு வேலூர் தேர்தல் முடிவு ஏமாற்றத்தை அளித்திருப்பதாகக் கூறப்படுகிகிறது. 
 கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில்  திமுக கூட்டணி வெற்றி பெற்றது. திமுக கூட்டணிக்கு 51 சதவீத வாக்குகள் கிடைத்தன. திமுகவுக்கு மட்டும் தனித்து 33 சதவீத ஓட்டுகள் கிடைத்திருந்தன. சிதம்பரம், தருமபுரி தொகுதிகளைத் தவிர்த்து பிற தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் லட்சக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
அப்போதே வேலூரில் தேர்தல் நடைபெற்றிருந்தால், அதையொட்டிய முடிவு திமுகவுக்குக் கிடைத்திருக்கலாம். ஆனால், வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், அந்தத் தேர்தல் எப்போது நடந்தாலும் தமிழகத்தில் நடைபெறும் வழக்கமான ‘இடைத்தேர்த’லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வேலூர் தேர்தல் கிட்டத்தட்ட அந்தப் பாணியில்தான் நடந்துமுடிந்து. ஏ.சி. சண்முகம் பலமான வேட்பாளர் என்பதாலும், அவருக்கென தனி செல்வாக்கு இருப்பதாலும், நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த அளவுக்கு தேர்தல் முடிவு இருக்காது என்று திமுக ஊகித்திருந்ததாக கூறப்படுகிறது. எனவே ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும் என்றே திமுக மதிப்பிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், தேர்தல் முடிவு திமுகவுக்கு அதிர்ச்சியையும் சில ஆச்சரியங்களையும் அளித்திருக்கிறது. தொடக்கம் முதலே அதிமுக வேட்பாளர் முன்னிலை வகித்தபோது திமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் ஆடிப்போய்விட்டனர். அதுவும் 7 சுற்றுகள் வரை ஏசி சண்முகம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தபோது, முடிவு அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்ற முடிவுக்கே திமுக நிர்வாகிகள் வந்துவிட்டனர். ஆனால், வாணியம்பாடி வாக்குகள் வேகமாக எண்ணியபோதுதான் முன்னிலையில் மாற்றம் ஏற்பட்டது. இறுதியில் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் கதிர்ஆனந்த் வெற்றி பெற்றார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிடம் நெருங்கவே முடியாத அளவுக்குத் தோல்வியைச் சந்தித்திருந்த அதிமுக, இந்த முறை திமுகவுக்கு மிக நெருக்கமாக வந்து வெற்றியை இழந்திருக்கிறது. இதுதான் ஸ்டாலினை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக வேலூர் தொகுதிக்குட்பட்ட குடியாத்தம், ஆம்பூர் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இந்த முறை ஆம்பூரில் திமுக கூடுதல் வாக்கு வாங்கியிருந்தாலும் குடியாத்தம் திமுகவை கவிழ்த்துவிட்டது. அந்த சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சுமார் 10 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றிருந்தது. 4 மாதங்களுக்குள் இத்தனை மாற்றம் ஏன் என்று திமுக தலைமை குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது.
 “இந்த அளவுக்கு நெருக்கமாக வந்ததற்கு அதிமுகவுக்கு செல்வாக்கு கூடிவிட்டது என்று அர்த்தமில்லை. ஏ.சி. சண்முகத்துக்கு இருந்த தனிப்பட்ட செல்வாக்கு காரணமாகவே திமுக நூலிழையில் வெற்றி பெற்றதாக” தேர்தல் முடிவுக்கு பிறகு ஸ்டாலினிடம் திமுக நிர்வாகிகள் கூறியதாகக் கூறப்படுகிறது. ஆனால், திமுகவில் உள்ள முக்கியஸ்தர்களையும் கூட்டணி கட்சியினரையும் பிரசாரத்துக்குக்கூட அழைக்காததும் திமுகவின் வெற்றி மதில் மேல் பூனை ஆனதற்குக் காரணமும் கூறப்படுகிறது.


வைகோ, திருமாவளவன், கனிமொழி, காங்கிரஸ் தலைவர்கள் என யாரையுமே திமுக பிரசாரத்துக்கு அழைக்கவில்லை. இவர்கள் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மூழ்கியிருந்தாலும், சனி, ஞாயிறு கிழமைகளில் பிரசாரம் செய்திருக்க முடியும். ஆனால், இவர்களை திமுக கண்டுகொள்ளவில்லை என்று திமுகவிலேயே பேசப்படுகிறது. பிரசாரம் முழுவதையும் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் மட்டுமே எடுத்துக்கொண்டனர். குறிப்பாக இளைஞரணி தலைவராக உயர்ந்துவிட்ட உதயநிதி பிரசாரத்துக்கு அதிமுக்கியத்துவம் தரப்பட்டது.

 
பிரசாரத்தின் கடைசி நாளில் மட்டுமே கூட்டணி கட்சி தலைவர்களை திமுகவினர் அழைத்தனர். வேலூரில் தேர்தல் தொடங்கியது முதலே கூட்டணி கட்சியினரின் ஒத்துழைப்பை திமுக ஏற்கவில்லை என்கிறார்கள் கூட்டணி கட்சியினர். நாடாளுமன்றத் தேர்தலில் பிரமாண்டமாக வெற்றி பெற்ற திமுகவுக்கு, வேலூர் தேர்தல் கிலியை ஏற்படுத்தி வெற்றியைத் தந்திருக்கிறது. ஒரு வகையில் திமுகவுக்கு வேலூர் தேர்தல் அனுபவ பாடத்தையும் நடத்தி சென்றிருக்கிறது. அந்தப் பாடத்தை திமுக படித்து விழித்துக்கொள்ளுமா என்பதே இப்போதைய கேள்வி.

click me!