புதுச்சேரியில் திமுக கூட்டணி ஆட்சி அமையுமா..? திமுக தெரிவித்த பரபரப்பான பதில்.!

By Asianet TamilFirst Published May 14, 2021, 9:25 PM IST
Highlights

திமுக எப்போதும் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயன்றதில்லை. புதுச்சேரியில் அதை செய்யப்போவதும் இல்லை என்று திமுக புதுச்சேரி தெற்கு மாநில அமைப்பாளர் சிவா தெரிவித்துள்ளார்.
 

புதுச்சேரியில் 3 நியமன உறுப்பினர்கள் விவகாரத்தை வைத்து, திமுக குறுக்கு வழியில் ஆட்சியில் அமர முயல்வதாக என்.ஆர். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டுக்கு திமுக பதில் அளித்துள்ளது. இதுபற்றி புதுச்சேரி திமுக தெற்கு மாநில அமைப்பாளரும் எம்.எல்.ஏ.வுமன சிவா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ஆளுங்கூட்டணியில் குழப்பம் உள்ளது. அதனால்தான் முதல்வர் மட்டும் பொறுப்பேற்றுள்ளார். அமைச்சர்கள் ஒருவரும் பொறுப்பேற்கவில்லை. கொரோனாவின் பிடியில் மக்கள் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அபாயகரமான காலகட்டத்தில் அரசியல் செய்வது சரியல்ல.
திமுக எப்போதுமே ஜனநாயகத்தை மீறி செயல்பட்டது கிடையாது. செயல்படப் போவதும் இல்லை. ஆனால், எதிரணியில் தேர்தல் முடிவு வெளியாகி 10 தினங்கள் ஆகியும் துணை முதல்வர் பதவி வழங்குவதா, இல்லையா?அமைச்சர் பதவி யார் என்ற குழப்பத்தில் உள்ளனர். இந்தக் குழப்பத்தால் புதுச்சேரி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அந்தக் குழப்பத்தையும், மக்கள் பாதிப்பையும்  மறைக்கவே திமுகவையும் சேர்த்து பல்வேறு கட்டுக் கதைகளைக் கூறுகிறார்கள். திமுகவுக்கு அதன் உயரம் தெரியும். ஜனநாயகத்தைக் காக்க நினைக்கும் திமுக, எப்போதும் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயன்றதில்லை. அதை செய்யப்போவதும் இல்லை” என்று சிவா தெரிவித்துள்ளார்.

click me!