அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக ஜூட்..? திமுகவை நோக்கி பார்வையைத் திருப்புகிறதா தேமுதிக..?

By Asianet TamilFirst Published Aug 8, 2020, 9:42 AM IST
Highlights

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வேண்டும். கொரோனா காரணமாக  தற்போது அரசியல் கட்சிகள் முடங்கிக் கிடந்தாலும், அக்டோபருக்கு பிறகு தமிழகத்தில் தேர்தல் பணிகள் வேகம் பிடிக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலை வெற்றிகரமாக சந்தித்த திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் அக்கூட்டணியில் அப்படியே தொடர்கின்றன. அதிமுக கூட்டணி எந்தப் பிளவும் ஏற்படவில்லையென்றாலும், அக்கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 
அன்புமணி ராமதாஸ் முதல்வராக வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அவ்வப்போது பேசிவருகிறார். கூட்டணியை ராமதாஸ் அறிவிப்பார் என்று அன்புமணியும் சொல்லிவருகிறார். இதனால், தேர்தல் நெருக்கத்தில் பாமக என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு வழங்கியதைபோல சீட்டுகளை எதிர்பார்த்தது தேமுதிக. ஆனால், அது நடக்கவில்லை. மேலும் மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு சீட்டை தேமுதிக அதிமுகவிடம் எதிர்பார்த்தது. ஆனால், ஜி.கே. வாசனுக்கு அந்த சீட்டை அதிமுக வழங்கியது. பாமக, தமாகாவுக்கு மாநிலங்களவை சீட்டுகள் வழங்கப்பட்டதால் தேமுதிகவுக்கு அதிருப்தி ஏற்பட்டது. ஆனாலும், பின்னர் அமைதியானது.
இந்நிலையில் தேமுதிக பொருளாளர் தினந்தோறும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார். விஜயகாந்த் ஓய்வு எடுத்துவரும் நிலையில், ஆன்லைன் மூலம் ஆலோசனை நடத்திவருகிறார் பிரேமலதா. “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கும் என கட்சித் தொண்டர்கள் குழம்ப வேண்டாம். இந்த முறை தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பே கூட்டணியை முடிவு செய்துவிடுவோம்” என்று ஆன்லைன் ஆலோசனையில் பிரேமலதா கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அப்படியானால், அதிமுக கூட்டணியில் தேமுதிக இல்லையா அல்லது இடம்பெற விரும்பவில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் திமுகவும் தேமுதிகவும் பரஸ்பரம் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த காலங்களைப் போல கடைசி வரை கூட்டணியை முடிவு செய்யாமல் ஜவ்வு போல இழுப்பதால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை உணர்ந்துள்ள தேமுதிக, இந்த முறை முன்கூட்டியே கூட்டணியை முடிவு செய்து தேர்தல் பணியாற்ற முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன்படி முன்கூட்டியே கூட்டணியை முடிவு செய்வதிலும் தேமுதிக ஆர்வம் காட்டிவருகிறது. பிரேமலதாவின் பேச்சை வைத்து பார்க்கும்போது சட்டப்பேரவைத்  தேர்தலில் திமுக கூட்டணிக்கு தேமுதிக செல்லுமா என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது.

click me!