சட்டப்பேரவைத் தேர்தலில் 171 தொகுதிகளில் திமுக போட்டி..? உலாவரும் ஐ-பேக் பட்டியல்..!

By Asianet TamilFirst Published Nov 17, 2020, 8:50 AM IST
Highlights

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் சமூக ஊடகங்களில் உலாவந்தவண்ணம் உள்ளன.
 

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திமுக தயாராகிவருகிறது. இன்னொரு பக்கம் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் டீம் திமுகவுக்காகத் தேர்தல் பணிகளை செய்துவருகிறது. ஐ-பேக் மீது திமுகவினர் பல்வேறு புகார்களைக் கூறினாலும், திமுக தலைமை அதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியும் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் திமுக, ஐ-பேக் அமைத்துதரும் களப்பணியை நம்பியுள்ளது.

 
இந்நிலையில் தேர்தலில் திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும்; கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று ஆய்வு செய்து பட்டியல் தயார் செய்து திமுக தலைமையிடம் ஐ-பேக் அறிக்கை கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டதோ, அதில் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் 3 தொகுதிகள் வீதம் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.


அதுதொடர்பான பட்டியலும் சமூக ஊடகங்களிலும் வலம வந்த வண்ணம் உள்ளன. அதன்படி காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட்டதால், அக்கட்சிக்கு 27 தொகுதிகள், 2 எம்.பி.  தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் வீதம் 24 தொகுதிகள்,  1 எம்.பி. தொகுதியில் போட்டியிட்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிக் லீக், இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா 3 தொகுதிகள் வீதம் 9 தொகுதிகள், மனித நேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் என பட்டியலிடப்பட்டுள்ளன.


இப்பட்டியல்படி கூட்டணி கட்சிகள் 63 தொகுதிகள் என்றும், திமுக 171 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சிறு கட்சிகளை திமுக சின்னத்தில் போட்டியிட வைப்பது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ பேக் அளித்துள்ள அந்தப் பட்டியலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளின் பட்டியலும்கூட இடம் பெற்று, உலா வந்துகொண்டிருக்கிறது. 

click me!