29 எம்.எல்.ஏக்கள் இருந்தபோதே முடியல... இப்போது முடியுமா..? தேமுதிகவின் ராஜ்ய சபா கனவு என்னாகும்?

By Asianet TamilFirst Published Feb 29, 2020, 8:45 AM IST
Highlights

2013-ல் கனிமொழியும், 2014-ல் திருச்சி சிவாவும் வெற்றி பெற்றார்கள். அப்போது காங்கிரஸ் கட்சியின் 5 பேர், மனித நேயமக்கள் கட்சியின் 2 பேர், புதிய தமிழகத்தின் ஒரு உறுப்பினர் என 31 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் திமுக ஒரு ராஜ்ய சபா எம்.பி. பதவியைக் கைப்பற்றியது. தங்கள் கைவசம் எம்.எல்.ஏ.க்கள் இருந்தபோதே தேமுதிக ராஜ்ய சபாவுக்கு தங்கள் கட்சி உறுப்பினரை எம்.பி.யாக்க முடியாமல் கோட்டை விட்டது. இப்போது ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாமல் தங்கள் கட்சிக்கு ராஜ்ய சபா உறுப்பினரை தேமுதிக எதிர்பார்க்கிறது. 

தங்களிடம் 29 எம்.எல்.ஏ.க்கள் இருந்தபோதே ராஜ்ய சபா எம்.பி.யைப் பெற முடியாத தேமுதிக, இப்போது எம்.எல்.ஏ.க்களே இல்லாமல் ராஜ்ய சபா எம்.பி.யைப் பெற தீவிரம் காட்டிவருகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்ய சபா எம்.பி.க்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் மார்ச் 6 அன்று நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு தலா 3 இடங்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் உதவியுடன் திமுக 3 எம்.பி.க்களைப் பெற முடியும். அதிமுகவுக்கு தனக்குள்ள எம்.எல்.ஏ.க்கள் அடிப்படையில் 3 எம்.எல்.ஏ.க்களைப் பெற முடியும். ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற ராஜ்ய சபா தேர்தலில் பாமகவின் அன்புமணிக்கு ஓரிடத்தை வழங்கியதுபோல இப்போது ஓரிடத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று தேமுதிக எதிர்பார்த்து காத்திருக்கிறது.


இதுதொடர்பாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் எல்.கே. சுதிஷ் சந்தித்து பேசியுள்ளார். ஆனால், அதிமுகவிலேயே 3 எம்.பி.க்களைப் பெற பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேமுதிக தொடர்ந்து வலியுறுத்திவருவது அதிமுகவை கோபம் கொள்ள செய்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறுகையில், “தேமுதிக தங்களுக்கு ஓரிடத்தை கேட்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதிமுகவிலேயே எம்.பி.க்கள் ஆவதற்கான திறமைசாலிகள் நிறைய பேர் உள்ளனர்” என்று தெரிவித்திருந்தார்.
தேமுதிகவுக்கு ஓரிடம் வழங்கும் பிரச்னையில் அதிமுக எடுக்கும் முடிவைப் பொறுத்தே அக்கட்சியுடனான கூட்டணி உறுதிப்பாடு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டப்பேரவையில் ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாமல் ராஜ்ய சபா எம்.பி.யாக தீவிர முயற்சி செய்யும் தேமுதிக, தங்களிடம் 29 எம்.எல்.ஏ.க்கள் இருந்தபோது வெல்ல முடியாமல் கோட்டை விட்ட சம்பவங்களும் நினைவுக்கு வருகின்றன.
கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 29 இடங்களைப் பிடித்த தேமுதிக பேரவையில் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது. 23 இடங்களை மட்டுமே பிடித்த திமுக, எதிர்க்கட்சிக் கட்சி என்ற அந்தஸ்தைக் கூட பெற முடியாமல் போனது. ஆனால், 29 இடங்களைப் பிடித்தபோதும் 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ராஜ்ய சபா  தேர்தல்களில் தேமுதிகவால் வெல்ல முடியவில்லை. தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதால், வெற்றி பெற முடியாமல் போனது.


மாறாக இந்த இரண்டு தேர்தல்களிலும் 23 உறுப்பினர்களையே பெற்றிருந்த திமுக வெற்றி பெற்றது. 2013-ல் கனிமொழியும், 2014-ல் திருச்சி சிவாவும் வெற்றி பெற்றார்கள். அப்போது காங்கிரஸ் கட்சியின் 5 பேர், மனித நேயமக்கள் கட்சியின் 2 பேர், புதிய தமிழகத்தின் ஒரு உறுப்பினர் என 31 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் திமுக ஒரு ராஜ்ய சபா எம்.பி. பதவியைக் கைப்பற்றியது. தங்கள் கைவசம் எம்.எல்.ஏ.க்கள் இருந்தபோதே தேமுதிக ராஜ்ய சபாவுக்கு தங்கள் கட்சி உறுப்பினரை எம்.பி.யாக்க முடியாமல் கோட்டை விட்டது. இப்போது ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாமல் தங்கள் கட்சிக்கு ராஜ்ய சபா உறுப்பினரை தேமுதிக எதிர்பார்க்கிறது. இது நடக்குமா இல்லையா என்பது சில தினங்களில் தெரியவரும்.

click me!