
பெயரை மாற்றியாவது தாலிக்கு தங்கம் திட்டத்தை தொடர வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு நியாயமா?
கட்சி நிர்வாகியின் இல்ல விழாவில் பங்கேற்க தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திண்டுக்கல்லுக்கு செல்லும் வழியில் திருச்சிக்கு வந்திருந்தார். அப்போது அவர் கூறுகையில், “பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு சாமானிய மக்களை வெகுவாகப் பாதிக்கும். இந்த விலை உயர்வு எந்த விதத்திலும் நியாயமே இல்லை. கொரோனா காலகட்டத்தில் பலர் வேலையிழந்து வறுமையில் உள்ளனர். மேலும் அனைத்து பொருட்களின் விலைவாசியும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த விலை உயர்வால் மேலும் பொருட்களின் விலைவாசி உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல
காஸ் சிலிண்டர்விலை உயர்வும் மக்களை அதிகமாகப் பாதிக்கும்.
தாலிக்கு தங்கம் தேவை
எனவே பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும். சுமைகளை மக்கள் மீது அரசு சுமத்தக் கூடாது. மக்களுக்காகத்தான் அரசு உள்ளது என்பதை முதலில் உணர வேண்டும். பெண்களுக்கான தாலிக்கு தங்கம் திட்டம், திருமண உதவித் தொகை திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மீண்டும் தொடர வேண்டும். பெண்களுக்கான எந்தத் திட்டத்தையும் திமுக அரசு நிறுத்தி வைக்கக் கூடாது. இப்போது அம்மா உணவகத்தை, கலைஞர் உணவகம் என்று மாற்ற முயற்சிப்பதைப் போல, ஆளுங்கட்சிக்கு ஏற்றார் போல திட்டத்தின் பெயரை மாற்றியாவது இத்திட்டத்தைத் தொடர வேண்டும்.” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
இடத்தைப் பிடிப்போம்
இதனையடுத்து செய்தியாளர்கள், ‘முன்பு திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக தேமுதிக என்று ஒரு நிலை இருந்தது. தற்போது அந்த நிலையிலிருந்து கட்சி தோல்வி அடைந்துள்ளதே’ என்று கேள்வியை எழுப்பினர். இதற்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், "எல்லாக் கட்சியும் அப்படித்தானே. அரசியல் கட்சிகளுக்கு வெற்றியும் தோல்வியும் சகஜம்தான். 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத கட்சி, தற்போது ஆட்சியில் உள்ளது. இதேபோல 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி, தற்போது ஆட்சியில் இல்லாமல் இருக்கிறது. இதெல்லாம் அரசியலில் சகஜம்தான். எங்களுடைய இடத்தை நாங்கள் நிச்சயம் பிடிப்போம்” என்று தெரிவித்தார்.