
சசிகலாவை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக, ‘ஏற்கனவே கட்சி எடுத்த முடிவுதான். என்றும் ஒரே முடிவுதான். நேற்று, இன்று, நாளையும் கட்சி எடுத்த முடிவு மட்டும்தான்’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
என்ன ஆனது ரூ.1000 திட்டம்?
நிபந்தனை ஜாமினில் திருச்சியில் தங்கையிருக்கும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்,கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இன்று 5 முறையாக கையெழுத்திட்ட ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ அதிமுக ஆட்சியில் இருந்தபோது தேர்தல் அறிக்கையில் இல்லாத வாக்குறுதிகளை எல்லாம் கூட நிறைவேற்றியது. ஆனால், தேர்தல் அறிக்கையில் கூறியபடி திமுக நிறைவேற்றவில்லை. மாதம் தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ. 1000 வழங்குவோம் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அளித்த வாக்குறுதியை திமுக அரசு ஏன் நிறைவேற்றவில்லை?
திமுக முரண்பாடு
பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரை மாநில அரசின் நிதி தன்னாட்சி பாதிக்கப்படும் என்பதால் நாங்கள் கடைசிவரை அதை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரவில்லை. ஆனால், இப்போது டி.ஆர் பாலு என்ன கூறுகிறார்? 'பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்' என்று டி.ஆர். பாலு சொல்கிறார். அதைப் பற்றி அவரிடம் கேட்டால், ‘கட்சி ரீதியாகச் சொன்னோம்' என்கிறார். ஆனால், தமிழக நிதி அமைச்சரோ, 'பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர முடியாது' என்று திட்டவட்டமாக சொல்கிறார். அவரிடம் கேட்டால், 'அது ஆட்சி எடுத்த முடிவு' என்கிறார். ஜிஎஸ்டி விவகாரத்தில், கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறது. ஆட்சி வேறு ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறது. இந்த விஷயத்தில் இரட்டை நிலைப்பாட்டுடன், முரண்பாடுகளின் மொத்த உருவமாக திமுக உள்ளது.” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஓபிஎஸ் - சசிகலா விவகாரம்
ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான ஓ. பன்னீர்செல்வம், சசிகலாவை சின்னம்மா என்று அழைத்தது குறித்தும் சசிகலா மீது மதிப்பும் மரியாதையும் உள்ளது என்று ஓபிஎஸ் கூறியது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “ஆறுமுகசாமி ஆணையம் ஏறத்தாழ விசாரணையை நடத்தி முடிக்க உள்ளது. தற்போது இதுகுறித்து நான் ஏதேனும் கருத்து கூறினால், ஆணையம் என்னையும் விசாரணைக்க அழைக்க சம்மன் கொடுக்கும். உங்களுக்கும் சம்மன் அனுப்பலாம். ஏனெனில், எங்கள் மீது வழக்கு போடுவதையே திமுக வாடிக்கையாக வைத்துள்ளது. எனவே, இந்த நேரத்தில் இதற்கு கருத்து சொல்ல விரும்பவில்லை" என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
அப்போது சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினாரே?" என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "கருத்து சொல்ல விரும்பவில்லை" என்று ஜெயக்குமார் தெரிவித்தார். சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், “ஏற்கனவே கட்சி எடுத்த முடிவுதான். என்றும் ஒரே முடிவுதான். நேற்று, இன்று, நாளையும் கட்சி எடுத்த முடிவு மட்டும்தான்” என்று தெரிவித்தார்.