மேற்குவங்க அரசுக்கு எந்த உதவியும் செய்ய தயார்..குற்றவாளிகளை ஆதரிப்பவர்களை மன்னிக்க முடியாது - பிரதமர் மோடி

Published : Mar 23, 2022, 09:14 PM IST
மேற்குவங்க அரசுக்கு எந்த உதவியும் செய்ய தயார்..குற்றவாளிகளை ஆதரிப்பவர்களை மன்னிக்க முடியாது - பிரதமர் மோடி

சுருக்கம்

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யத் தயார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  

மேற்கு வங்க மாநிலம், பிர்பும் மாவட்டம், ராம்பூர்ஹத் அருகேயுள்ள பரிஷால் கிராமப் பஞ்சாயத்து துணைத் தலைவராக இருந்த வந்த ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேக் என்பவரை, நேற்று முன்தினம் மாலையில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர், நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த பாது ஷேக், மருத்துவமனை கொண்டு செல்லப்படும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நடந்த அடுத்த சில மணி நேரத்தில் அப்பகுதியில் வன்முறை வெடித்து, வீடுகளில் தீ வைக்கப்பட்டது.

இதில் நடந்த தீ வைப்பு சம்பவத்தில் 7 முதல் 8 வீடுகள் வரை எரிந்து சாம்பலாகின. ஒரு வீட்டில் இருந்து 7 பேர் இந்த தீவிபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த மூவரில் ஒருவர் நேற்று காலை இறந்ததால், உயிரிழப்பு 8 ஆக உயர்ந்ததுள்ளது. இந்தச் சம்பவத்தால் ராம்பூர்ஹத் பகுதியில் எப்ப வேண்டுமானும் வன்முறை வெடிக்கும் பதற்றமாக சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு பாதுகாப்பு காரணமாக ஏராளமான போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த 11 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ராம்பூர்ஹத் காவல் நிலைய அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து விசாரிக்க கூடுதல் டிஜிபி (சிஐடி) ஞானவந்த் சிங் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து துணைத் தலைவர் குண்டு வீசிக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடந்த வன்முறைச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் தீவைத்து எரித்துக் கொல்லப்பட்ட நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று  தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து, ”மாவட்ட நீதிபதியின் முன்னிலையில் போதிய சேமிப்பு வசதியுடன், குற்றம் நடந்த இடத்தின் அனைத்து கோணங்களையும் உள்ளடக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் மாநில அரசு உடனடியாக சம்பவ இடத்தில் பொருத்த வேண்டும். மத்திய தடயவியல் ஆய்வக குழு அங்கு பார்வையிட்டு ஆதாரங்களை சேகரிக்க வேண்டும். சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் அவர்களுக்கு போதிய பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேநேரத்தில், இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துள்ள உயர் நீதிமன்றம், முதலில் மாநில அரசுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இதனிடையே மேற்குவங்க பாஜகவை சேர்ந்த 9 பேர் கொண்ட குழு மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து இவ்விவகாரத்தில் தலையிடுமாறு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து வன்முறை சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க அரசிடம் உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது. 

பிர்பும் வன்முறைக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். மேலும் மேற்கு வங்கத்தில் குற்றவாளிகளை கைது செய்ய என்ன உதவி தேவைப்பட்டாலும், மத்தியிலிருந்து மாநிலம் வரை அனைத்து உதவிகளையும் செய்ய உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு எதிராக மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவும் இதுபோன்ற குற்றவாளிகளை ஊக்குவிப்பவர்களும் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!