மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி கலகலக்கிறது... ஆட்சியைப் பிடிக்க சரத்பவாருடன் கைகோர்க்கிறதா சிவசேனா..?

By Asianet TamilFirst Published Oct 30, 2019, 6:55 AM IST
Highlights

தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும் காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஒரு வேளை சிவசேனா இந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் பலம் 154 கிடைத்துவிடும். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 146 இடங்கள் போதுமானது. 
 

மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா இடையே ஆட்சி அமைப்பதில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், சிவசேனா தேசியவாதா காங்கிரஸுடன் கைகோர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்கும் அளவுக்கு இந்தக் கூட்டணிக்கு மெஜாரிட்டி இருந்தபோதும், உடனடியாக ஆட்சி இங்கே அமையவில்லை. சிவசேனாவின் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்பதால், அக்கட்சி இரண்டு நிபந்தனைகளை விதித்தது.
முதல்வர் பதவியை சுழற்சி முறையில் இரண்டரை ஆண்டுகளுக்கு விட்டு தர வேண்டும், அமைச்சரவையில் 50 சதவீத இடங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று முக்கியமான இரு நிபந்தனைகளை விதித்தது. ஆனால், இந்த இரு நிபந்தனைகளையும் பாஜக ஏற்க மறுத்துவிட்டது. தேர்தலில் கூடுதல் இடங்களில் தாங்கள் வெற்றி பெற்றதால், முதல்வர் பதவி தங்களுக்குத்தான் என்றும், அமைச்சரவையில் 50 சதவீத இடங்களையும் வழங்க முடியாது என்று கூறிவருகிறது. மேலும் தான்தான் 5 ஆண்டுகளுக்கும் முதல்வராக இருப்பேன் என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துவிட்டார்.


இதனால், கூட்டணி ஆட்சி ஏற்படுவதில் சிக்கல் நிலவிவருகிறது. இதற்கிடையே நேற்று இரு கட்சிகளுக்கும் நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தையை சிவசேனா ரத்து செய்து பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க தயார் என்று தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஏற்கனவே அறிவித்துள்ளன. இந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முன்வந்தால், சிவசேனாவுக்கு முதல்வர் பதவியை விட்டு தருவதாகவும் தேசியவாத காங்கிரஸ் அறிவித்துள்ளது. சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் என்றும் பேசப்பட்டுவருகிறது.
ஆனால், தேர்தலிலும் பொதுவெளியிலும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை விமர்சித்து வாக்குக் கேட்டு, தற்போது அவர்களுடனேயே கூட்டணி அமைப்பது சரியாக இருக்காது என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டுவருகிறது. எனவே சிவசேனா தயக்கம் காட்டிவருவதாகவும் தெரிகிறது. என்றபோது இந்த விஷயத்தில் இன்னும் ஓரிறு தினங்களில் சிவசேனா இறுதி முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும் காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஒரு வேளை சிவசேனா இந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் பலம் 154 கிடைத்துவிடும். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 146 இடங்கள் போதுமானது. 

click me!