நாங்குநேரியில் களமிறங்குகிறதா பாஜக..? இடைத்தேர்தல் ஆதரவு பற்றி அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த பொன்னார்!

By Asianet TamilFirst Published Sep 30, 2019, 8:29 AM IST
Highlights

வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால், பாஜகவும் நாங்குநேரியில் களமிறங்க முடிவு செய்துவிட்டதா என்ற அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் தேர்தலை போலவே. இடைத்தேர்தலிலும் பாஜகவை பிரசாரத்துக்கு அழைக்க அதிமுக விரும்பவில்லை என தகவல் வெளியாகி உள்ள நிலையில், அதிருப்தி அடைந்த திருநெல்வேலி மாவட்ட பாஜக நிர்வாகிகள், கடைசி நேரத்தில் வேட்புமனு படிவத்தை வாங்கி சென்றதாகக் கூறப்படுகிறது. 

 நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு படிவத்தை பாஜகவினர் வாங்கி சென்றதாக  தகவல் வெளியாகி உள்ள நிலையில், இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது பற்றி கட்சி தலைமை இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அதிமுகவுக்கு பாஜக அதிர்ச்சி அளித்துள்ளது.
 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பிடித்தது. அக்கட்சி 5 தொகுதிகளில் போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் அதிமுகவோடு சேர்ந்து பாஜகவும் தோல்வியடைந்தது. என்றாலும் பாஜகவுடன் அதிமுக தலைமை நெருக்கமாகவே இருந்துவருகிறது. ஆனால், அதிமுகவில் ஒரு சாரார் பாஜகவுடனான கூட்டணியே அதிமுக தோல்விக்குக் காரணம் என்றும் பேசிவருகிறார்கள். அதன் அடிப்படையில்தான் வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பாஜகவை அதிமுக ஒதுக்கி வைத்தது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிட பாஜக விரும்பியதாக தகவல் வெளியானது. ஆனால், இடைத்தேர்தல்களில் அதிமுகவே வேட்பாளார்களை நிறுத்தும் என்பதை கூட்டணி கட்சிகளிடம் சொல்லிவிட்டோம் என்று தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிச்சாமி உறுதிபட தெரிவித்தார். இந்நிலையில் நாங்குநேரியில் பாஜக சார்பில் போட்டியிட வேட்புமனு படிவங்களை வாங்கி சென்றதாக ஞாயிற்றுக் கிழமை அன்று தகவல் வெளியானது.   
வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால், பாஜகவும் நாங்குநேரியில் களமிறங்க முடிவு செய்துவிட்டதா என்ற அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் தேர்தலை போலவே. இடைத்தேர்தலிலும் பாஜகவை பிரசாரத்துக்கு அழைக்க அதிமுக விரும்பவில்லை என தகவல் வெளியாகி உள்ள நிலையில், அதிருப்தி அடைந்த திருநெல்வேலி மாவட்ட பாஜக நிர்வாகிகள், கடைசி நேரத்தில் வேட்புமனு படிவத்தை வாங்கி சென்றதாகக் கூறப்படுகிறது. கட்சியின் தலைமை உத்தரவின்படி எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக வேட்புமனு படிவங்களை வாங்கி சென்றதாகவும் சொல்லப்படுகிறது.


இதற்கிடையே கும்பகோணத்தில் பேட்டி அளித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இடைத்தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தார். “இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது கட்சி தலைமை இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.” என்று அதிரடியாகத் தெரிவித்தார். முன்னதாக புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவதாக அறிவித்து, பின்னர் அந்த முடிவை பாஜக வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

click me!