அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஆவாரா..? அதிமுக வழங்க முன்வருமா அல்லது 2009 கதை திரும்புமா?

By Asianet TamilFirst Published May 24, 2019, 6:43 AM IST
Highlights

தேர்தலில் தம்பிதுரை , கே.பி. முனுசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்களும் தோல்வியடைந்திருப்பதால், அவர்கள் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை எதிர்பார்க்கலாம். இதேபோல பதவி முடிய உள்ள மைத்ரேயன் போன்றவர்களும் மீண்டும் மாநிலங்களவை பதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 

 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் பாமக தோல்வியடைந்துள்ள நிலையில், தேர்தல் உடன்பாடு கண்டதுபோல பாமகவுக்கு ஒரு மாநிலங்கள உறுப்பினர் பதவி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்ததும் முதல் கட்சியாக பாமகவை சேர்த்துக்கொண்டது. 7 நாடாளுமன்றத் தொகுதிகள், 1 மாநிலங்களவை தொகுதி என பாமக உடன்பாடு செய்துகொண்டது. ஆனால், நேற்று வாக்குகள் எண்ணப்பட்டபோது தருமபுரி தவிர மற்ற தொகுதிகளில் ஆரம்பம் முதலே பாமக வேட்பாளர்கள் பின் தங்கியே இருந்து தோல்வியுற்றனர். தொடக்கத்தில் முன்னிலை வகித்துவந்த அன்புமணி ராமதாஸ், மதியத்துக்கு மேல் பின்தங்கி இறுதியில் தோல்வி அடைந்தார்.
பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், ஜூலை மாதத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் ஏற்கனவே ஒத்துக்கொண்டபடி பாமகவுக்கு அதிமுக மாநிலங்களவை சீட்டு ஒதுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தலில் தேனி தொகுதியைத் தவிர போட்டியிட்ட மற்ற தொகுதிகளில் அதிமுகவும் தோல்வியைத் தழுவியுள்ளது. 
தேர்தலுக்கு முன்புவரை சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கைப்படி 4  மாநிலங்களவை உறுப்பினர் அதிமுகவுக்கு கிடைத்தது. ஆனால், தற்போது திமுக கூடுதலாக 13 சட்டப்பேரவை உறுப்பினர்களை பெறுவதால், அதிமுவுக்கான மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் ஒன்று குறைந்துவிடும். 3 உறுப்பினர் பதவி மட்டுமே கிடைக்கும் என்பதால், இதில் இருந்துதன் பாமகவுக்கு ஒரு உறுப்பினர் பதவியை அதிமுக வழங்க வேண்டும்.
ஆனால், தேர்தலில் தம்பிதுரை , கே.பி. முனுசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்களும் தோல்வியடைந்திருப்பதால், அவர்கள் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை எதிர்பார்க்கலாம். இதேபோல பதவி முடிய உள்ள மைத்ரேயன் போன்றவர்களும் மீண்டும் மாநிலங்களவை பதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். எனவே பாமகவுக்கு ஒத்துக்கொண்டபடி ஒரு உறுப்பினர் பதவியை அதிமுக வழங்கினால், அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராகிவிடலாம். ஒரு வேளை கட்சி முன்னணியினரைத் திருப்திபடுத்த, அதிமுக மறுக்கும்பட்சத்தில் அதில் சிக்கல் ஏற்படலாம்.


இப்போதுபோலவே கடந்த 2009 நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பிடித்த பாமக, 7 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை பதவி என உடன்பாடு கண்டது. தேர்தலில் முழுமையாக பாமக தோல்வியுற்றது. தேர்தலுக்கு பிறகு, அடுத்த சில மாதங்களில் அதிமுகவுடன் கூட்டணியை பாமக முறித்துக்கொண்டது. அப்போது 2010-ல் பாமகவுக்கு அதிமுக வழங்குவதாக ஒத்துக்கொண்ட மாநிலங்களவை பதவி கிடைக்காமலேயே போனது.  

click me!