மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்புமா அதிமுக..? இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுமா?

By Asianet TamilFirst Published Oct 23, 2019, 9:52 AM IST
Highlights

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதாவது 2016-க்கு பிறகு இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சிக்கு சிம்மசொப்பணமாக மாறிவருவதைப் பார்க்க முடிகிறது. 2017 ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுகவையும் ஆண்ட கட்சியான திமுகவையும் ஓரங்கட்டி ஒரு சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்ற அதிசயம் நடந்தேறியது. 

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மூலம் மீண்டும் அதிமுக பழைய ஃபார்முக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


இடைத்தேர்தல் என்பது ஆளுங்கட்சிக்கான அக்னிப் பரீட்சை என்ற கருதப்பட்ட காலம் ஒன்று இருந்தது. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை இடைத்தேர்தல் என்பது கவுரவ தேர்தலாகப் பார்க்கப்படுகிறது. ஆளுங்கட்சியாக இருப்பவர்கள் எப்படியாவது இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதை ஒரு உத்தியாகவே வைத்திருக்கிறார்கள். கருணாநிதி - ஜெயலலிதா காலத்தில் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் அத்தி பூத்தாற்போலவே வெற்றி பெற்றது நடத்திருக்கிறது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் துறைமுகம் (1989), மங்களூர் (2004) ஆகிய இடைத்தேர்தல்களில் மட்டுமே எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றன. இதேபோல கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நத்தம் (2000) தொகுதியில் மட்டுமே எதிர்கட்சி வெற்றி பெற்றது. இந்த இரு ஆட்சிக் காலத்திலும் நடந்த இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சிகள் 10 முதல் 15 சதவீத வாக்குகளை கூடுதலாகப் பெற்றுள்ளது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகின்றன.
ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதாவது 2016-க்கு பிறகு இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சிக்கு சிம்மசொப்பணமாக மாறிவருவதைப் பார்க்க முடிகிறது. 2017 ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுகவையும் ஆண்ட கட்சியான திமுகவையும் ஓரங்கட்டி ஒரு சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்ற அதிசயம் நடந்தேறியது. இதேபோல 6 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற 22 தொகுதிகளில் நடந்த இடைத்தே எதிர்க்கட்சியான திமுக 13 தொகுதிகளில் வெற்றி பெற்று கெத்து காட்டியது. ஆளுங்கட்சியான அதிமுக 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.


தமிழகத்தில் தற்போதுதான் இடைத்தேர்தல் என்பது உண்மையாகவே ஆளுங்கட்சிக்கு அக்னி பரீட்சையாக மாறியிருக்கிறது. இதுவரை அதிமுகவில் இருந்த பிம்ப அரசியல் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், அமைச்சரவையில் இடம் பிடித்திருந்த இரண்டாம் கட்ட தலைவர்களான இபிஎஸ்- ஓபிஎஸ் ஆகியோர் அந்த இடத்துக்கு வந்ததே வெற்றி பெற முடியாமல் போனதற்குக் காரணம் என்றும் அரசியல் அரங்கில் சொல்லப்படுகிறது. ஆனால், இடைத்தேர்தல் பாணியில் நடைபெற்ற வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் மூலம் அதிமுக பழைய நிலையை நோக்கி செல்கிறது என்ற தோற்றம் ஏற்பட்டதையும் மறுப்பதற்கில்லை.
தற்போது ஆளுங்கட்சியான அதிமுக பழைய நிலைக்கு திரும்பிவிட்டதா இல்லையா என்பதை உணர்த்த நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஓர் உதாரணமாக மாறியிருக்கிறது. வழக்கமான ஆளுங்கட்சியின் பணப்பலம், அதிகாரப் பலம் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்தி அதிமுக இடைத்தேர்தலை சந்தித்ததாக அங்கிருந்து வந்த தகவல்கள் தெரிவித்தன. இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றால், மீண்டும் பழைய நிலைக்கு அதிமுக வந்துவிட்டது என்ற தோற்றம் மேலும் உருவாகும். இரு தொகுதிகளிலும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தேர்தல் முடிவுகள்அதிமுகவின் நிலையை தெள்ள தெளிவாக உணர்த்திவிடும்.   

click me!