மாநிலங்களவை உறுப்பினராக அதிமுகவில் போட்டாபோட்டி... பாமகவுக்கு ஒரு சீட்டு அம்போ?

By Asianet TamilFirst Published Jun 20, 2019, 7:15 AM IST
Highlights

அதிமுகவிலேயே அதிகமானோர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை எதிர்பார்ப்பதால், அதிமுக தலைமை குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இருக்கும் 3 இடங்களில் பாமகவுக்கு ஓரிடத்தை வழங்கினால், கட்சியினர் மத்தியில் மேலும் அதிருப்தி உண்டாகுமே என்றும் அதிமுக கட்சி தலைமை கருதுவதாகவும் கூறப்படுகிறது. 

ஒப்பந்தப்படி மாநிலங்களவைத் தேர்தலில் பாமகவுக்கு ஓரிடத்தை அதிமுக வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

  நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்த பாமக, 7 +1 என்ற தொகுதி உடன்பாடு கண்டது. தேர்தலில் அதிமுக கூட்டணி 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வியது. தருமபுரியில் போட்டியிட்ட அன்புமணியும் தேர்தலில் தோல்வியைத் தழுவ நேர்ந்தது. மக்களவைத் தேர்தலில் தோற்றுபோனாலும், மாநிலங்களவையில் அதிமுக ஓரிடத்தை வழங்கும் என்று பாமக எதிர்பார்த்து காத்திருக்கிறது.
மக்களவைத் தேர்தலில் அதிமுகவும் படுதோல்வி அடைந்ததால், அக்கட்சியைச் சேர்ந்த பலரும் மாநிலங்களவை உறுப்பினராகத் தீவிர முயற்சி செய்துவருக்கிறார்கள். அக்கட்சியின் மூத்த தலைவர்களான தம்பிதுரை, கே.பி.முனுசாமி, அன்வர் ராஜா போன்றோர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்துவருகிறார்கள். இவர்களைத் தவிர தன்னுடைய அண்ணனுக்காக அமைச்சர் சி.வி. சண்முகம், தமிழ்மகன் உசேன், மைத்ரேயன், கோகுல இந்திரா என்று மேலும் பலரும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற முயற்சித்துவருவதாகக் கூறப்படுகிறது.


 அதிமுகவிலேயே அதிகமானோர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை எதிர்பார்ப்பதால், அதிமுக தலைமை குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இருக்கும் 3 இடங்களில் பாமகவுக்கு ஓரிடத்தை வழங்கினால், கட்சியினர் மத்தியில் மேலும் அதிருப்தி உண்டாகுமே என்றும் அதிமுக கட்சி தலைமை கருதுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், பாமகவுக்கு சீட்டு தருவதை அதிமுக தலைமைத் தவிர்க்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கட்சியினர் எதிர்பார்ப்புக்கு மாறாக பாமகவுக்கு ஒரு சீட்டு வழங்குவோம் என்றும் கூறும் நிலையிலும் அதிமுக இருப்பதாகத் தெரியவில்லை.

 
கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது 6+1 என பாமக அதிமுகவுடன் தொகுதி உடன்பாடு கண்டது. போட்டியிட்ட எல்லாத் தொகுதிகளிலும் பாமக தோல்வி அடைந்தது. ஆனால், 2010-ல் மாநிலங்களவை தேர்தலில் ஓரிடம் அதிமுக வழங்க வேண்டிய நிலையில் இருந்தது. 2006-ல் சி.வி.சண்முகம் உறவினர் கொலை வழக்கில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோரை சேர்க்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சி.வி.சண்முகம். இதனால் கொதித்துபோன ராமதாஸ் சார்பில் ஜி.கே.மணி, தன்ராஜ் ஆகியோர் கொடநாட்டில் தங்கியிருந்த ஜெயலலிதாவை சந்தித்து வழக்கைத் திரும்ப பெறக் கோரி சி.வி. சண்முகத்தை வலியுத்தும்படி கேட்டுகொண்டார்கள். 
சிவி சண்முகத்தை அழைத்து ஜெயலலிதா ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், அவர் வழக்கை திரும்ப பெற்றிருப்பார். ஆனால், ஜெயலலிதா தரப்பிலிருந்து அப்படி எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், பாமக நிர்வாகக் குழுவைக் கூட்டி அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக பாமக அறிவித்தது. இப்போதுபோல எந்த நெருக்கடியும் இல்லாமல் பாமகவை கூட்டணியிலிருந்து அவர்களாகவே போகும்படி ஜெயலலிதா செய்தார். இப்போது தேர்தலுக்கு மிகவும் குறைந்த கால அவகாசமே இருப்பதால் அதிமுக தலைமை என்ன முடிவை எடுக்கப்போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.

click me!