ஆளுநருடன் விரோதம் இல்லை...! தேநீர் விருந்தை புறக்கணித்தது ஏன்...! ஸ்டாலின் விளக்கம்..

By Ajmal KhanFirst Published Apr 18, 2022, 11:54 AM IST
Highlights

தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக ஆளுநர் ரவி அளித்த விருந்தை புறக்கணித்தது  ஏன் என்பதை 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டபேரவையில் தெரிவித்துள்ளார். அதில் தனக்கும் ஆளுநருக்கும் இடையே மிகமிகச் சுமூகமான உறவு இருப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.
 

ஆளுநர் விருந்தை புறக்கணித்தது ஏன்?

நீட் விலக்கு மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி 200 நாட்களுக்கு மேல் அகியுள்ள நிலையில் இந்த மசோதா மீது தமிழக ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென கூறி தமிழ்புத்தாண்டையொட்டி ஆளுநர் அளித்த விருந்தை தமிழக முதலமைச்சர். மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்து இருந்தன. இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் நடைபெற்றது. இதனையடுத்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வாசித்தார். 

ஆளுநருடன் சுமூக உறவு

அதில்,  நீட் தேர்வுக்கு எதிரான மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அந்த மசோதா ஆளுனர் மாளிகை வளாகத்தில் தூங்கி கிடக்கிறது. இதுவரை மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம்தாழ்த்தி வருகிறார். இந்த நிலையில் தமிழக மக்களுக்கு எதிரான இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் சட்டப்பேரவையின் மாண்பை பாதுகாக்கும் வகையிலும் அவருடனான தேநீர் சந்திப்பை புறக்கணித்ததாக தெரிவித்தார். மேலும் இதுகுறித்து ஆளுநருக்கு விளக்கம் அளித்துள்ளதாக தெரிவித்தார் ஆளுநருக்கும் தனக்கும் இடையே எவ்வித தனிப்பட்ட விரோதமும் இல்லை, ஆளுநர் பழக இனிமையானவர் எங்களுக்கு உரிய மரியாதையை ஆளுநர் அளித்து வருகிறார். நாங்களும் அதற்கு உரிய மரியாதையை அளித்து வருகிறோம். அரசியல்  கடந்து பண்பாட்டை பாதுகாப்போம் என தெரிவித்தார்.

மீண்டும் அனைத்து கட்சி கூட்டம்

மேலும் தனது 50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் எத்தனையோ வலிகளையும், அவமானங்களையும் சந்தித்து  இருப்பதாகவும் அதனை புறந்தள்ளிவிட்டு  என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற அடிப்படையிலேதான் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். எனக்கு தனிப்பட்ட முறையில் கிடைக்கும் அவமானம் ஆகியவற்றால் தமிழகத்திற்கு மக்களுக்கு நன்மை கிடைக்கும்  என்றால் அதனை நான் ஏற்பேன் எனவும் தெரிவித்தார். எனவே  தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றிய அனுப்பப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு தமிழக ஆளுநர் அனுப்ப வேண்டும் எனவும் மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தேவைப்பட்டால் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவும்  தயாராக இருப்பதாகவும் இதில் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

click me!