இளையராஜாவை விமர்சிப்பதா? பாஜகவினர் குறிவைத்து தாக்கப்படுகின்றனர்...! கொதித்தெழுந்த ஜே.பி.நட்டா...

By Ajmal KhanFirst Published Apr 18, 2022, 11:14 AM IST
Highlights

பிரதமர் மோடியையும், அம்பேத்கரையும் ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்திருந்த கருத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில்,  இளையராஜாவிற்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சகிப்பு தன்மை இல்லாத அரசியலை காட்டுவதாக கூறியுள்ளார்.

மோடியும்- அம்பேத்கரும்

ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம் மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.  இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது என்றும்  சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.  முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார் என்றும்  அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" என்று பிரதமர் மோடியைப் புகழ்ந்து இளையராஜா அந்த புத்தகத்தில் எழுதியுள்ளார்.

இளையராஜா கருத்துக்கு எதிர்ப்பு

இளையராஜாவின் இந்த கருத்துக்கு ஒரு சில அரசியல் கட்சிகள் விமர்செய்திருந்தது. அதே போல இளையராஜா கருத்து பாஜக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்று தெரிவித்து இருந்தன. தனது சொந்த கருத்தை திரும்ப பெற போவதில்லையென்றும் இசையமைப்பாளர் இளையராஜா உறுதிபட தெரிவித்திருந்தார்.  இந்த நிலையில் இளையராஜாவிற்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஒரு கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிக்கு இளையராஜாவின் கருத்து பிடிக்கவில்லை என்பதால் ஒரு இசை மாமேதையை  கடுமையாக விமர்சிப்பது  சரியா என ஜேபி நட்டா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் எதிர்க்கட்சிகள் சகிப்புத் தன்மை இல்லாமல் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 

சகிப்பு தன்னை இல்லாத அரசியல்

தமிழ்நாடு,கேரளா,மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக தொண்டர்கள் குறிவைத்து தாக்கப்படுவதாகவும்  ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். இது சகிப்புத்தன்மை இல்லாத அரசியலை காட்டுவதாக கூறியுள்ளார் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆக்கபூர்வமான அரசியலை பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் செய்து வருவதாகவும் கூறியுள்ளவர்,  ஆனால்  எதிர் கட்சிகள் தேர்தல் தோல்வியின் காரணமாக ஏமாற்றமடைந்து எதிர்மறை அரசியல் செய்வதாகவும் கூறி உள்ளார். இதன் காரணமாகத்தான் இது போன்ற கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் அந்த கடிதத்தில் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.


 

click me!