மாநிலங்களவை எம்.பி தேர்தல்.. ஆர்.எஸ் பாரதி, தங்கத் தமிழ்ச்செல்வனுக்கு டாட்டா ஏன்.? அறிவாலயத்தில் கசியும் தகவல்

By Asianet TamilFirst Published May 16, 2022, 8:32 AM IST
Highlights

தன்னுடைய உடல்நிலையைக் கருத்தில்கொண்டு எம்.பி. பதவி வேண்டாம் என்று ஆர்.எஸ். பாரதி ஏற்கனவே தலைமைக்கு தெரிவித்துவிட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  என்றாலும், அதையும் மீறி கட்சி தலைமை பதவி வழங்கினால், அதை ஏற்கும் மனநிலையில்தான் ஆர்.எஸ். பாரதி இருந்ததாகவும் திமுகவில் சொல்கிறார்கள். 

மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி, தங்கத் தமிழ்ச்செல்வன் பெயர்கள் பரிசீலிக்கப்படாதது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளின் காலம் முடிவடைகிறது. திமுகவில் ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், ராஜேஸ்குமார்; அதிமுகவில் நவனீதகிருஷ்ணன், எஸ்.ஆர். பாலசுப்பிரமனியன், விஜயகுமார் ஆகியோர் பதவிக் காலம் முடிவடைகிறது. இதனையடுத்து இந்த இடங்களை நிரப்புவதற்காக ஜூன் 10 அன்று தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்களின் பலத்தில் இந்தப் பதவிகள் நிரப்பப்பட உள்ளன. ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தமிழக சட்டப்பேரவையில் திமுக கூட்டணிக்கு 159 எம்.எல்.ஏ.க்கள் உள்ளன. அதிமுக கூட்டணிக்கு 70 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பாமகவுக்கு 5 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

இந்த எண்ணிக்கை அடிப்படையில்  திமுக கூட்டணிக்கு 4 எம்.பி.க்களும் அதிமுக கூட்டணிக்கு 2 எம்.பி.க்களும் கிடைப்பது உறுதி. இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் அறிவித்தார். திமுக சார்பில் ராஜேஸ்குமார், தஞ்சை கல்யாணசுந்தரம், கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஓரிடத்தை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியது. இந்தப் பட்டியலில் ஆர்.எஸ். பாரதி, தங்கத்தமிழ்ச் செல்வன் ஆகியோர் பெயர் இல்லாமல் போனது திமுகவினர் புருவத்தை உயர செய்திருக்கிறது. திமுக சார்பில் பல முக்கியமான வழக்குகளைக் கையாள்வது ஆர்.எஸ். பாரதிதான். ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமான அவர் மீண்டும் எம்.பி.யாக்கப்படுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தன்னுடைய உடல்நிலையைக் கருத்தில்கொண்டு எம்.பி. பதவி வேண்டாம் என்று ஆர்.எஸ். பாரதி ஏற்கனவே தலைமைக்கு தெரிவித்துவிட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  என்றாலும், அதையும் மீறி கட்சி தலைமை பதவி வழங்கினால், அதை ஏற்கும் மனநிலையில்தான் ஆர்.எஸ். பாரதி இருந்ததாகவும் திமுகவில் சொல்கிறார்கள். ஆனால், அவருடைய பெயரை திமுக தலைமை பரிசீலிக்கவில்லை. இதேபோல கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்டிப்பட்டியில் நிறுத்தப்பட்டிருந்தால் தங்கத் தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றிருப்பார். ஆனால், ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிராக நிறுத்த வேண்டும் என்பதற்காக போடிநாயக்கனூரில் தங்கத் தமிழ்ச்செல்வன் களமிறக்கப்பட்டார். அந்தத் தேர்தலில் ஓபிஎஸ்ஸிடம் தங்கத் தமிழ்ச்செல்வன் தோல்வியடைந்தார். 

இதனால், தங்கத் தமிழ்ச்செல்வனுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால், அருக்கும் டிக்கெட் வழங்கப்படவில்லை. இதனால், தங்கத் தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், தங்கத் தமிழ்ச்செல்வனுக்கு 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கும் எண்ணத்தில் அவர் பெயர் தவிர்க்கப்பட்டதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜேஷ்குமார் மாநிலங்களவை எம்.பி.யாக கடந்த ஆண்டு பதவியேற்றபோதே 8 மாதங்கள் மட்டுமே பதவி இருந்தது. அதனால், அவருக்கு மீண்டும் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 

கட்சியின் மூத்த முன்னோடியான தஞ்சை கல்யாணசுந்தரம் 1989-ஆம் ஆண்டில் பாபநாசம் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் மூப்பனாரை எதிர்த்து போட்டியிட்டவர். அதன் பிறகு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்தார். தற்போது அதற்கு பரிசாக மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைத்திருக்கிறது. வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த கிரிராஜன் முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர். 2014-இல் வட சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவருக்கும் மாநிலங்களவை எம்.பி. வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 

click me!