ஸ்டாலின் பகிர்ந்த தமிழணங்கு ஓவியம்.. போட்டியாக அண்ணாமலை பகிர்ந்த தமிழ்த்தாய்.. திமுக - பாஜக இடையே குஸ்தி.!

By Asianet TamilFirst Published May 15, 2022, 10:41 PM IST
Highlights

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அடுத்தடுத்து தமிழணங்கு ஓவியத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த நிலையில் திமுக - பாஜகவினர் இடையே வார்த்தை மோதல்கள் ஏற்பட்டுள்ளன. 

தமிழகத்தைச் சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு ரோம் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. வாட்டிகன் நகரில் தமிழ்த் தாய் இசைக்கப்பட்டதால், அதை அமைச்சர் மனோ தங்கராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதன் காணொளியைப் பதிவிட்டார். இந்த ட்விட்டர் பதிவை முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய பக்கத்தில் ரீட்வீட் செய்திருந்தார் .

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் ! https://t.co/4nAVp6m7Cb pic.twitter.com/eu9g1WTVgI

— M.K.Stalin (@mkstalin)

மேலும் ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்ட தமிழணங்கு ஓவியத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்திருந்தார். அந்தப் படத்துடன், ‘எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே..’ என்று பெருமையாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்தார். ஏற்கனவே ஏ.ஆர். ரஹ்மான் தமிழணங்கு என்ற பெயரில் தமிழ்த் தாயின் ஒவியத்தைப் பகிர்ந்தபோது, அது சர்ச்சையாக்கப்பட்டது. கறுப்பு நிறத்திலும் தலைவிரி கோலமாகவும் இருக்கும் படத்தை எதிர்த்து பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை முன் வைத்தனர். இந்நிலையில் முதல்வர் அதே ஓவியத்தைப் பகிர்ந்ததால், அதற்குப் போட்டியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு தமிழ்த் தாய் ஓவியத்தைப் பகிர்ந்தார்.

 

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் pic.twitter.com/blg72my7yX

— K.Annamalai (@annamalai_k)

அந்த ஒவியத்துடன், “எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே” என்றும் அண்ணாமலை பதிவிட்டிருந்தார். இதனையடுத்து எது உண்மையான தமிழணங்கு ஓவியம் என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் திமுகவினர் மற்றும் பாஜகவினர் இடையே ஏற்பட்டுள்ளது. இரு கட்சியினரும் வழக்கம்போல் சமூக வலைத்தளங்களில் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். 

click me!