ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை ஏன் நீக்கவில்லை.? பதில் சொல்லுங்க பழனிச்சாமி.. ‘முரசொலி’ சுளீர் கேள்வி!

By Asianet TamilFirst Published Jul 12, 2022, 11:08 PM IST
Highlights

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மீது ஏன் நடவடிக்கையில்லை? அவரை ஏன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கவில்லை? பழனிச்சாமி கூட்டம் பதிலளிக்குமா என்று திமுகவின் கட்சி பத்திரிகையான முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.

ஓ. பன்னீர்செல்வத்தின் பின்னணியில் திமுக இருப்பதாக இபிஎஸ் தரப்பு குற்றம் சாட்டி வருகிறது. ஓ. பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றிய விவகாரத்தில் ஓபிஎஸ்ஸையும் முதல்வர் மு.க. ஸ்டாலினையும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பதிலடி கொடுத்திருந்த நிலையில், இன்று வெளியான திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘முரசொலி’யில் ஓபிஎஸ் மகனும் தேனி எம்.பி.யுமான ஓ.பி. ரவீந்திர நாத்தை கட்சியை விட்டு ஏன் நீக்கவில்லை என்று ‘சிலந்தி’ படம் பொறித்த குறுங்கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது.

மேலும் வாசிக்க: உங்க சண்டையில் திமுகவை இழுப்பதா.? அதிமுக அலுவலகம் யாருக்கென நீதிமன்றத்தில் நிரூபியுங்க.. ஆர்.எஸ்.பாரதி கடுகடு!

அதில், “தி.மு.க. ஒரு தீயசக்தி... அதை அரசியலிலிருந்து அப்புறப்படுத்துவதற்காக எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கினார்; அந்த தி.மு.க.வை பன்னீர்செல்வம் புகழ்ந்து பேசுகிறார். அவருடைய மகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துவிட்டு வந்து, அவரது செயல்பாடுகளின் சிறப்பைப் பற்றிப் பேசுகிறார். இவை எல்லாம் கட்சி விரோத நடவடிக்கைகள்’’ எனக் கூறி அ.தி.மு.க.விலிருந்து பன்னீர் செல்வத்தையும், அவருக்குத் துணையாக இருந்த வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது!

மேலும் வாசிக்க: அதிமுக அலுவலகத்தில் என்ன நடந்தது.? அலுவலகம் யாருக்கு சொந்தம்.? ஓபிஎஸ்-இபிஎஸ்ஸுக்கு வருவாய்த் துறை நோட்டீஸ்!

ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வையும் கலைஞரையும் புகழ்ந்து பேசியதால் அவரையும் சட்டமன்ற உறுப்பினர்களாக விளங்கும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து நீக்கிய பழனிச்சாமி கூட்டம், ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்தை ஏன் நீக்கவில்லை? பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துவிட்டு அவரது ஆட்சியைப் பாராட்டிப் பேசியது தவறு - என்று பேசினீர்களே; அறிக்கைகள் வெளியிட்டீர்களே ; பன்னீர் செல்வத்தின் மீதான குற்றச்சாட்டுக்களில், அவரது மகன் முதலமைச்சரைப் பாராட்டிப் பேசியதும் ஒன்றல்லவா? அப்படி இருக்க ரவீந்திரநாத் மீது ஏன் நடவடிக்கையில்லை? அவரை ஏன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கவில்லை? பழனிச்சாமி கூட்டம் பதிலளிக்குமா?” என்று முரசொலியில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க: இபிஎஸ்-ஓபிஎஸ் பதவி சண்டைக்கு மு.க.ஸ்டாலின் தான் காரணம்..! பரபரப்பு புகார் தெரிவித்த ஆம் ஆத்மி

click me!