
இந்துத்துவா சக்திகளிடமிருந்து திராவிட இயக்கத்தை காக்கும் நோக்கில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டாக காலியாக இருந்த ஆர்.கே.நகருக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட மருது கணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், சுயேட்சையாக தினகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்த மாத்திரத்தில், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் ஆகிய கட்சிகளின் ஆதரவை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரினார்.
ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் அறிவித்துவிட்டன.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்த நிலைப்பாடு குறித்து முடிவு செய்ய மதிமுகவின் உயர்நிலைக்கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக முடிவு செய்யப்பட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கடந்த 2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு இப்போதுதான் தேர்தலில் திமுகவிற்கு மதிமுக ஆதரவு அளித்துள்ளது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, திமுகவிற்கு ஆதரவு அளிப்பதன் காரணம் குறித்து விளக்கினார். கூட்டாட்சி தத்துவத்தையே தகர்க்கும் வகையில் மத்திய பாஜக அரசு செயல்பட்டுவருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்திற்கு கேடுவிளைவிக்கும் வகையிலான நியூட்ரினோ, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் ஆகிய திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த மத்திய பாஜக அரசு துடிக்கிறது. காவிரி, பாலாறு, முல்லை பெரியாறு ஆகிய விவகாரங்களில் தமிழகத்தின் உரிமை பறிக்கப்படுகிறது. தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் இந்துத்துவா சக்திகளை எதிர்க்க துணிச்சல் இல்லாமல், அவர்களுக்கு சேவகம் புரிகிறது தமிழக அரசு.
தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜக, ஆளுநர் மூலமாக நேரடியாகவே தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. நூறாண்டுகளாக கட்டி எழுப்பப்பட்ட திராவிட இயக்கத்தை தகர்க்க இந்துத்துவ சக்திகள் முயற்சி செய்கின்றன.
தமிழகத்தின் உரிமைகளையும் கூட்டாட்சி தத்துவத்தையும் திராவிட இயக்கத்தையும் காக்க வேண்டிய வகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.
எனவே இந்த விவகாரங்களை எல்லாம் சீர்தூக்கி பார்த்து திராவிட இயக்கத்தை காக்க வேண்டி உள்ளதாலும், அதிமுக அரசுக்கு பாடம்புகட்டும் வகையிலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாகவும் திமுகவின் வெற்றிக்கு உழைக்க இருப்பதாகவும் வைகோ தெரிவித்தார்.
மதிமுக உயர்நிலைக்குழு உறுப்பினர்களின் முழு ஆதரவுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் வைகோ தெரிவித்தார்.