
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு மதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
கடந்த ஓராண்டாக காலியாக இருந்த ஆர்.கே.நகருக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் திமுக சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட மருது கணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், சுயேட்சையாக தினகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் அறிவித்துவிட்டன.
ஆனால், மதிமுகவின் நிலைப்பாடு அறிவிக்கப்படாமல் இருந்தது. ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் உயர்நிலைக்கூட்டம் நடைபெற்றது. அதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், மதிமுக, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். தேர்தல் பிரசாரத்தின்போது, மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ, திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவை விமர்சித்ததைவிட திமுகவைத்தான் கடுமையாக சாடினார்.
மக்கள் நலக் கூட்டணி என்பதே திமுகவிற்கு எதிராக அமைக்கப்பட்டதோ என நினைக்கத் தோன்றும் அளவிற்கு திமுகவை கடுமையாக வசைபாடினார் வைகோ.
இந்நிலையில், தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்பது என்ற நிலைப்பாட்டை அக்கட்சி எடுத்துள்ளது.
பாஜகவிற்கும் ஆளும் அதிமுகவிற்கும் எதிரான வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்பதற்காக திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக திருமாவளவன் தெரிவித்திருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் திமுக அளித்துள்ளது. இந்நிலையில், மதிமுகவும் திமுகவிற்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவை எடுத்துள்ளது.
இது திமுகவிற்கு கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது.