
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது குறித்து கடந்த சில வருடங்களாகவே கூறி வருகிறார். தற்போது இதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
ரஜினியின் நண்பரும் நடிகருமான கமல் ஹாசன், அண்மைக் காலமாக சமூகம் குறித்து, அரசியல் குறித்தும் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார். இதனால், நடிகர் கமலுக்கும், தமிழக அமைச்சர்களுக்கும் முட்டல் மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில், தான் அரசியலுக்கு வரப்போவதாக கமல் கூறி வருகிறார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, காலியாக உள்ள சென்னை, ஆர்.கே.நகர் தேர்தல் இந்த மாதம் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் யாரும் எதிர்பாத வகையில் நடிகர் விஷால், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். ரஜினி, கமலுக்கு முன்பாகவே விஷால் அரசியல் களத்தில் குதித்துள்ளார்.
நடிகர் விஷால், தன்னுடைய தங்கையின் திருமணத்துக்காக, கடந்த சில தினங்களுக்கு முன்பாக டிடிவி தினகரனை நேரடியாக சென்று அழைப்பு விடுத்திருந்தார். திருமணத்துக்கு சென்ற தினகரனும், தம்பதிகளை வாழ்த்தினார்.
இதன் பின்னர் தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, தம்பி விஷால் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறோம் என்று கூறியிருந்தார். திடீர் அரசியல் பிரவேசம் செய்துள்ள விஷால், தினகரனுக்கும் போட்டியாக உள்ளாரா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.
வாக்குகளைச் சிதற வைக்கவே, விஷால் வேட்பாளராக களமிறங்கி உள்ளதாகவும், இதற்கு பின்னணியாக தினகரன் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கும் விஷாலுக்கு நடிகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல், அவருக்கு எதிராகவும் அரசியல் கட்சியைச் சார்ந்த சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், டிடிவி தினகரனின் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் கூறும்போது, நடிகர் விஷாலுக்கு அரசியல் ஆர்வம் உள்ளது. இல்லை என்றால் நடிகர் சங்க தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவருக்கு அரசியல் பண்பு இருக்கிறது; அவர் களத்தில் வந்திருக்கிறார்; முடிவை மக்கள் தீர்மானிப்பார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
அது மட்டுமல்லாது விஷாலின் அரசியல் வாழ்க்கைக்கு தினகரன், அன்றே அச்சாரம் போட்டார் என்றும் கூறியுள்ளார். ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளைப் பிரிப்பதில் அவரும் ஒருவராக இருப்பார் என்றும் அவரை நாங்கள் போட்டியாளராக கருதவில்லை என்றும் போட்டி எங்களுக்கும் திமுகவுக்கு மட்டுமே என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.