
நடிகர் விஷால் ஒன்றும் எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ அல்ல என்றும், அவரது அரசியல் கனவு மட்டுமல்ல சினிமா வாழ்க்கையும் விரைவில் அஸ்தமணமாகும் என அமைச்சர் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான சென்னை ஆர்.கே.நகரில் வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் இரட்டை இலை சின்னம் கிடைத்த உற்சாகத்தில் அதிமுக சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார்.
திமுக சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட மருது கணேஷ் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். இபிஎஸ் – ஓபிஎஸ்டன் ஏற்பட்ட மோதல் காரணமாக, கட்சி. சின்னம் என இரண்டையும் இழந்தாலும் டி.டி.வி.தினகரன் இத்தொகுதியில் மீண்டும் களம் காணுகிறார்.
தேமுதிக போட்டியிடவில்லை என அறிவித்துள்ள நிலையில், பாஜக சார்பில் கரு.நாகராஜன் வேட்பாளராக போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலைக்கோட்டுதயம் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான நடிகர் விஷால் திடீரென ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
நடிகர்- நடிகைகள் விஷாலுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், அரசியல் கட்சிகள் சில அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. சினிமா டிக்கெட் மாதிரி இல்ல அரசியல் டிக்கெட் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்திருந்தார்.
விஷால் போன்ற நடிகர்கள் எல்லாம் அரசியலில் நிலைத்து நிற்க முடியாது என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை எதிர்ப்புத் தெரிவித்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நடிகர் விஷால் ஒன்றும் எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ அல்ல என்றும், அவரது அரசியல் கனவு மட்டுமல்ல சினிமா வாழ்க்கையும் விரைவில் அஸ்தமணமாகும் என கூறினார்.