அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு குறைந்த தொகுதிகள் ஒதுக்கீடு ஏன்..? அன்புமணி ராமதாஸ் பரபரப்பு விளக்கம்..!

By Asianet TamilFirst Published Feb 27, 2021, 8:38 PM IST
Highlights

இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாலேயே இத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிற  தொகுதிகளை குறைத்து பெற்றுக்கொண்டோம் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாமக இடையே இன்று தொகுதி பங்கீடு முடிந்தது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் ஜி.கே. மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் கையெழுத்திட்டனர். தொகுதி பங்கீட்டுக்குப் பிறகு அன்புமணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாமக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்தலில் அதிமுக - பாமக கூட்டணி நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியைப் பெறும். இத்தேர்தலில் எங்களுடைய ஒரே நோக்கம், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டுமென கோரிக்கை வைத்தோம். அதை அதிமுக அரசு நிறைவேற்றி தந்திருக்கிறது.
40 ஆண்டுகளாக இட ஒதுக்கீடுக்காகப் போராடி, பல போராட்டங்கள் நடத்தி இன்று மருத்துவர் ராமதாஸின் கோரிக்கை முதல் கட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாலேயே இத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிற  தொகுதிகளை குறைத்து பெற்றுக்கொண்டோம். இதனால் பாமகவின் பலம் குறையப் போவதில்லை. இக்கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவார்” என்று அன்புமணி தெரிவித்தார்.
 

click me!