அதிமுக பொதுக்குழு முடிந்ததும் ஓபிஎஸ்-இபிஎஸ்ஸை பாஜக தலைவர்கள் சந்தித்தது ஏன்.? கேள்வி கேட்டு உலுக்கும் ஜோதிமணி!

By Asianet TamilFirst Published Jun 23, 2022, 10:15 PM IST
Highlights

அதிமுக பொதுக்குழு முடிந்ததும் பாஜக தலைவர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் சந்திக்க வேண்டிய தேவை என்ன? என்று கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுகவில் கடந்த 10 நாட்களாக ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பேசு பொருளாக இருந்தது. இதற்கு அதிமுக பொதுக்குழுவில் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 23 தீர்மானங்களைத் தவிர்த்து வேறு எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்றக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில், ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற முடியவில்லை. இ ந் நிலையில் 23  தீர்மானங்களையும் நிராகத்த இபிஎஸ் தரப்பு கோரிக்கையை ஏற்று ஜூலை 11-ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இரண்டாகப் பிரிந்துவிட்ட நிலையில், இரு தலைவர்களையும் பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரை சந்தித்து பேசினர்.

Latest Videos

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் இருவரும் முகம் கொடுத்துக்கூட பேச முடியாத சூழலில், இருவரையும் பாஜக தலைவர்கள் சந்தித்தது அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பாஜக தலையிட்டிருக்குமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. இந்தச் சந்திப்பு தொடர்பாக விளக்கம் அளித்த பாஜக - அதிமுக தலைவர்கள், ‘குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மு  டெல்லியில் வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். இந்த வேட்புமனுத் தாக்கல் நிகழ்வில் பங்கேற்க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தலைவர்களும் பங்கேற்கிறார்கள். அதில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் வகையிலேயே ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோரை பாஜக தலைவர்கள் சந்தித்ததாக’ இரு கட்சியினரும் தெரிவித்தனர்.

இந்நிலையில் அதிமுக தலைவர்கள் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்ஸுடனான சந்திப்பு குறித்து கரூர் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அதிமுக பொதுக்குழு முடிந்ததும் பாஜக தலைவர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் சந்திக்க வேண்டிய தேவை என்ன? நடப்பது அதிமுகவின் உள்கட்சி விவகாரம் அல்லவா?” என்று ஜோதிமணி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

click me!