பாஜக தலைவர்கள் திடீர் சந்திப்பு.. ஒற்றைத்தலைமை விவகாரத்தில் அதிமுகவுக்கு பாஜக அழுத்தம்.? ஜெயக்குமார் விளக்கம்!

By Asianet TamilFirst Published Jun 23, 2022, 9:37 PM IST
Highlights

அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை குறித்து பாஜக பேச்சுவார்த்தை நடத்தியதா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுகவில் கடந்த 10 நாட்களாக ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பேசு பொருளாக இருந்தது. இதற்கு அதிமுக பொதுக்குழுவில் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 23 தீர்மானங்களைத் தவிர்த்து வேறு எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்றக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில், ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற முடியவில்லை. இ ந் நிலையில் 23  தீர்மானங்களையும் நிராகத்த இபிஎஸ் தரப்பு கோரிக்கையை ஏற்று ஜூலை 11-ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இரண்டாகப் பிரிந்துவிட்ட நிலையில், இரு தலைவர்களையும் பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரை சந்தித்து பேசினர்.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் இருவரும் முகம் கொடுத்துக்கூட பேச முடியாத சூழலில், இருவரையும் பாஜக தலைவர்கள் சந்தித்தது அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பாஜக தலையிட்டிருக்குமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இதை மறுத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். கிரீன்வேய்ஸ் சாலையில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பேசிய பிறகு ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் பாஜக தலைவர்களின் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவியும் மாநில தலைவர் அண்ணாமலையும் சந்தித்தார்கள்.

இந்தச் சந்திப்பின்போது தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது தொடர்பாகவும், குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்க அழைப்புவிடுத்தும் அவர்கள் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசினார்கள். இதுதொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களுடன் பேசிவிட்டு முடிவை அறிவிப்பதாக அவர்களிடம் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பின்போது குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் குறித்து பேசினோம். ஆதரவு கேட்டுதான் இந்த சந்திப்பு நடந்தது. இவைதவிர, அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக எப்போதும் தலையிடுவது இல்லை.

இன்று நடைபெற்ற பொதுக்குழுவானது, மிக எழுச்சியோடு நடந்த ஒரு பொதுக் குழுவாகும். பொதுக்குழுவின் ஒட்டுமொத்த முடிவும் ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதுதான். அந்த ஒற்றைத் தலைமையாக இபிஎஸ் தலைமையேற்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த பொதுக்குழு உறுப்பினர்களின் வேண்டுகோள் ஆகும். அதன்படிதான் பொதுக்குழு தள்ளி வைக்கப்பட்டது. இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டது தொடர்பாக நான் எதையும் பார்க்கவும் இல்லை, கேட்கவும் இல்லை" என்று ஜெயக்குமார் தெரிவித்தார். 

click me!