நடிகர் ரஜினியை விடாமல் துரத்துகிறதா பாஜக..? வாண்டடாக அரசியல் ஆக்கப்பட்டதா செம்மொழி தமிழாய்வு நிறுவனம்?

By Asianet TamilFirst Published Jun 5, 2020, 9:03 PM IST
Highlights

வழக்கமாக ஒருவர் கோரிக்கை வைத்து, அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும்பட்சத்தில், கோரிக்கை எழுப்பியவரின் பெயரை சமூக ஊடங்களில் அமைச்சகங்கள் ‘டேக்’ செய்வது புதிதல்ல. ஆனால், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் முழு நேர இயக்குநரை நியமிக்க வேண்டும் என்று ட்விட்டர் வாயிலாகவோ, கடிதம் வாயிலாகவோ மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தை நடிகர் ரஜினி கோரவில்லை.

 நடிகர் ரஜினிகாந்தை பாஜகவுக்கு இழுக்கும் முயற்சியாக செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தைப் பயன்படுத்தியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் இயக்குனராக பேராசிரியர் ஆர்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார். இதை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அந்தப் பதிவை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோருடன் ‘டேக்’ செய்திருந்தார். பிரதமர், முதல்வருடன் ‘டேக்’ செய்ததோடு சம்பந்தம் இல்லாமல் நடிகர் ரஜினியையும் அமைச்சர் பொக்ரியல் ‘டேக்’ செய்திருந்தார். அதுவும் ‘புரோட்டாகா’லுக்கு மாறாக தமிழக உயர்க் கல்வி துறை அமைச்சர் அன்பழகன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் பெயர்களுக்கு முன்னால் ‘டேக்’ செய்திருந்தார் மத்திய அமைச்சர்.

 
இந்த விவகாரம் சமூக ஊடங்களில் விமர்சிக்கப்பட்டது. ரஜினி ஏன் ‘டேக்’ செய்யப்பட்டார் என்ற கேள்வியையும் பலர் முன்வைத்தார்கள். வழக்கமாக ஒருவர் கோரிக்கை வைத்து, அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும்பட்சத்தில், கோரிக்கை எழுப்பியவரின் பெயரை சமூக ஊடங்களில் அமைச்சகங்கள் ‘டேக்’ செய்வது புதிதல்ல. ஆனால், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் முழு நேர இயக்குநரை நியமிக்க வேண்டும் என்று ட்விட்டர் வாயிலாகவோ, கடிதம் வாயிலாகவோ மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தை நடிகர் ரஜினி கோரவில்லை.


ஆனால், ஏன் ரஜினி பெயரை மத்திய அமைச்சர் பொக்ரியால் ‘டேக்’ செய்தார் என்ற கேள்வி எழுகிறது. இந்நிலையில் தன்னுடைய பெயரை ‘டேக்’ செய்து தகவலை வெளியிட்டதால், முழு நேர இயக்குநர் நியமிக்கப்பட்டதற்கு மத்திய அமைச்சருக்கு தன் கைப்பட  நன்றி தெரிவித்து ரஜினி கடிதம் எழுதியதையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் மத்திய அமைச்சர் பொக்ரியால். அதில், ‘பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமையில், நம் பாரத தேசத்தின் எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க உறுதி கொண்டிருக்கிறோம். @HRDMinistry  தமிழ் மொழியினை மேலும் வலுப்படுத்தும் அக்கறையுடன் பணிபுரிந்து வருகிறது என்பதை உங்களுக்கு உறுதிபடுத்துகிறேன்.’ என்று தெரிவித்திருந்தார். ஆனால், இந்த முறை ரஜினி பெயருடன் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பெயரை ‘டேக்’ செய்திருந்தார் மத்திய அமைச்சர் பொக்ரியால். கடந்த முறை பொன்னாரின் பெயரை மத்திய அமைச்சர் ‘டேக்’ செய்யவில்லை. மாறாக, இந்த முறை இணைத்திருந்தார்.


ரஜினி பாஜகவில் இணைய வேண்டும் என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசியிருக்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன். கடந்த மார்ச் மாதம் 3 திட்டங்களை ரஜினி அறிவித்த பிறகும்கூட, ரஜினி பாஜகவில் இணைய வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தினார் பொன்.ராதாகிருஷ்ணன். ஆனால், கொரோனா பரவலுக்கு பிறகு ரஜினியின் திட்டங்கள் பற்றியோ, அவருடைய செயல்பாடு பற்றியோ பேச்சுமூச்சு இல்லை. நடிகர் ரஜினி பாஜகவில் இணைய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தார். தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் ரஜினியை பாஜகவில் இணைக்கும் முயற்சியாக, இதுபோன்ற செயல்கள் மேற்கொள்ளப்படுகிறதா என்ற கேள்வி பொதுவெளியிலும் அரசியல் அரங்கிலும் எழுந்துள்ளது. 

click me!