
அறிகுறி அற்ற நபர்களிடமிருந்து கொரோனா நோய்த்தொற்று பரவுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த அவ்வமைப்பின் தொழில்நுட்ப தலைவர் மற்றும் தொற்றுநோய் மருத்துவ நிபுணர் மரியா வான் கெர்கோவ் இவ்வாறு கூறியுள்ளார் பல நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா வைரஸ் அறிகுறியற்ற நபர்களிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுவது அரிதிலும் அரிதானது என தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறினார். வைரஸ் தொடர்பாக ஆறுதலளிக்கும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன என குறிப்பிட்ட அவர், பெரும்பாலான நோயாளிகளுக்கு வைரஸ் அறிகுறி தென்படுவதில்லை என கூறினார். இது சமீபத்தில் நாம் அடிக்கடி கேட்கக் கூடிய ஒன்றாக உள்ளது என்ற அவர், இந்தியாவில் இந்த வகை நோயாளிகள் அதிக அளவில் உள்ளனர், சுமார் 30% முதல் 50% பேர் அறிகுறி அற்றவர்களாகவே உள்ளனர் என்றார்.
இந்த கொரோனா அறிகுறி அற்ற நபர்களால் பெரிய அளவில் ஆபத்து இல்லை என்றும், காரணம் அது மற்றவர்களுக்கு பரவாது என்பதே ஆகும், அறிகுறியற்ற நபர்களிடமிருந்து மற்ற நபர்களுக்கு கொரோனா பரவுவது இல்லை என்பது வைரஸ் தொற்று மற்றும் தொடர்புதடம் அறிந்த நாடுகளின் தரவுகளில் இருந்து தெரியவந்திருக்கிறது என்றார். குறிப்பாக இத்தகைய கண்டுபிடிப்புகள் சிங்கப்பூரில் ஒரு ஆய்வறிக்கையில் வெளியாகியுள்ளன, எங்களிடமும் அதற்கான தகவல்கள் உள்ளன. குறிப்பாக தற்போதுள்ள நிலையில் அமெரிக்கா மற்றும் ஆசியா உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து தான் அதிகமாக கொரோனா பரவுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10 நாட்களாகவே ஆசிய நாடுகளில் கொரோனா தாக்கம் மிக தீவிரமாக உள்ளது, அதிலும் இந்தியாவில் பெரும்பாலானோருக்கு வைரஸ் அறிகுறிகள் தென்படாததால் அவர்கள் அதிக அளவில் கவலைப்படவோ அச்சப்படவோ தேவையில்லை.
கடந்த வாரம் சீனாவின் வுஹான் நகரத்தில் சுமார் 90 லட்சத்து 98 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அத்தனை பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் வெறும் 300 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது, அதிலும் பெரும்பாலானோர் வைரஸ் அறிகுறி அற்றவர்களாக இருந்துள்ளனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 1,174 பேரையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு எந்தவிதமான கொரோனா வைரஸ் தோற்றும் உறுதியாகவில்லை. அதேபோல் அந்த அறிகுறியற்ற நபர்கள் பயன்படுத்தும் டூத் பிரஸ், முகக் கவசம், கையுறைகள், டவல், டம்ளர், மக் போன்றவற்றை சோதனை செய்ததில் அவைகளில் கொரோனா வைரஸ் தோற்று இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அந்த 300 பேரும் வைரஸ் அறிகுறியுடன் இருந்திருப்பின் அது பலருக்கு பரவி இருக்கக் கூடும் எனவும், அதனால் ஏற்படும் சூழலை கற்பனைகூட செய்து பார்த்திருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். வைரஸ் அறிகுறி இன்றி கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அவர்கள் கலக்கமடையவோ, பயப்படவோ தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.