ஒற்றைத் தலைமை யார்.? என்னுடைய ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்குத்தான்.. திண்டுக்கல் சீனிவாசன் ஓபன் டாக்.!

By Asianet TamilFirst Published Jun 16, 2022, 7:37 AM IST
Highlights

அதிமுகவில் ஒற்றைத் தலைமை சலசலப்பு எழுந்துள்ள நிலையில், ‘என்னுடைய ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்குத்தான்’ என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை பற்றிய பேச்சுகள் அவ்வப்போது எழுவது வழக்கம். ஆனால், பிறகு அந்த சலசலப்புகள் அப்படியே அடங்கிவிடும். ஆனால், அண்மைக் காலமாக அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்றும் பாஜகதான் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுவதாகவும் பாஜக - அதிமுகவினர் இடையே கருத்து பகிர்வுகள் நடைபெற்று வருகின்றன. பலமனான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படவில்லை என்ற புகார் அதிமுகவினர் மத்தியிலேயே உள்ளது. இதனால், ஒற்றைத் தலைமை தேவை குறித்து அதிமுக நிர்வாகிகள் மீண்டும் வலியுறுத்தத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

 

இன்னொரு பக்கம் சசிகலா, ‘நான் அதிமுக தலைமையை ஏற்பேன்’ என்று தொடர்ந்து பேசி வருகிறார். இரட்டை தலைமை இருப்பதால், அதை வைத்து சசிகலா தான் தான் அந்த ஒற்றைத் தலைமை என்பதைப் போல பேசியும் வருவதாக அதிமுகவினர் நினைப்பதாகவும் அக்கட்சிக்குள் பேசப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23 அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றுவது தொடர்பாக அதிமுக தலைவர்களும் நிர்வாகிகளும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் கட்சிக்கு ஒற்றைத் தலைமை என்பது குறித்து குரல் எழுப்பினர். 

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால், யார் தலைமை என்பது பற்றி ஆலோசிக்கவில்லை’ என்று ஜெயக்குமார் தெரிவித்தார். ஜெயக்குமாரின் இந்தக் கருத்துக்குப் பிறகு ஒற்றை தலைமை பற்றிய விவாதங்கள் அதிமுகவில் சூடுபிடித்துள்ளன. அதிமுகவில் ஒற்றை தலைமையா ஓபிஎஸ் இருக்க வேண்டும், ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர் ஓபிஎஸ் என்றெல்லாம் சென்னையின் பிரதான சாலைகளில் பெரிய போஸ்டர்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒட்டியிருந்தனர். இதற்கிடையே ஒற்றைத் தலைமை குறித்து அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் அவர்களுடைய இல்லத்தில் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டனர்.

எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எம்.ஆர். விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம், கோவை சத்யன் ஆகியோர் பங்கேற்றனர். இதேபோல திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துவிட்டு ஓ.பன்னீர் செல்வத்தைச் சந்தித்து பேசினர். அப்போது திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒற்றைத் தலைமை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த திண்டுக்கல் சீனிவாசன், “பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. என்னுடைய ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்குதான்.” என்று தெரிவித்தார். ஒற்றைத் தலைமைக்கு யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற கேள்விக்கு, “வெயிட் அண்ட் சீ” என்று திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

click me!