ரஜினி திடீர் அறிக்கை.... பின்னணியில் பாஜக..? புட்டுப்புட்டு வைத்த ரசிகர்கள்..!

By Asianet TamilFirst Published Feb 17, 2019, 2:33 PM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்று ரஜினி திடீரென்று அறிவித்து அறிக்கை வெளியிட்டதற்கான பின்னணி பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்று ரஜினி திடீரென்று அறிவித்து அறிக்கை வெளியிட்டதற்கான பின்னணி பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

அரசியலில் இறங்கப்போவதாக கடந்த 2017 டிசம்பர் 31-ஆம் தேதி ரஜினி அறிவித்தார். அப்போது, “வரும் சட்டப்பேரவைத்தேர்தல்தான் தன்னுடைய இலக்கு. உள்ளாட்சித் தேர்தலிலோ நாடாளுமன்றத் தேர்தலிலோ போட்டியிடப் போவதில்லை” என்று ரஜினி அறிவித்தார். இதன்பிறகு ரஜினி மக்கள் மன்றத்தைப் பலப்படுத்தும் பணியிலும் தமிழகத்தில் உள்ள 60 ஆயிரம் பூத்களுக்கு ரசிகர்களை நியமிக்கும் பணியிலும் ரஜினி ஈடுபட்டுவருகிறார். அவ்வப்போது அரசியல் ரீதியாக கருத்துகளைத் தெரிவித்துவரும் ரஜினி, தொடர்ந்து சினிமாவிலும் நடித்துவருகிறார்.

இந்நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ரசிகர்கள் தரப்பில் ரஜினிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. சில ரசிகர்கள் ‘நாங்கள் இருக்கும் இடத்தில் வேறு யாரோ இருக்கிறார்கள்’ என்றெல்லாம் மெகா போஸ்டர் அடித்து சென்னை, கோவையில் ஒட்டினார்கள். மகள் செளந்தர்யாவின் திருமண பணிகளில் பிஸியாக இருந்ததால், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அவரால் மன்ற பணிகளில் ஈடுபட முடியவில்லை. மகள் திருமணம் முடிவடைந்துவிட்ட நிலையில், இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்தக் கூட்டத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கூட்டத்துக்குப் பிறகு, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; என் பெயரையோ மன்ற கொடியையோ யாரும் பயன்படுத்தக் கூடாது; தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க திட்டங்கள் வைத்திருக்கும் கட்சிக்கு வாக்களியுங்கள்’ என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் ரஜினி தெரிவித்திருந்தார். ஏற்கனவே சட்டப்பேரவைத் தேர்தலில்தான் போட்டி என்று ரஜினி அறிவித்த நிலையிலும் தற்போது எந்தக் கட்சியும் ரஜினியின் ஆதரவைக் கோராத நிலையிலும் இந்த அறிக்கை ஏன் வெளியிடப்பட்டது என்பது பற்றி ரஜினி ரசிகர் மன்றத் தரப்பில் விசாரித்தபோது சில தகவல்கள் கிடைத்தன.

“ரஜினி அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தது முதலே, அவர் மீது பாஜக முத்திரைக் குத்தப்பட்டுவருகிறது. அவரை யாரோ இயக்குகிறார்கள் என்று குற்றச்சாட்டுகளை திமுக உள்ளிட்ட கட்சிகள் வைத்தவண்ணம் உள்ளன. தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக ரஜினி பேசியதை எல்லாம் திட்டமிட்டு பாஜக ஆதரவு அரசியல் நிலைப்பாடாக மாற்றினார்கள். மோடி பலசாலி என்று யதேச்சையாக ரஜினி பேசியதும் பாஜக ஆதரவால் ரஜினி இப்படி பேசுகிறார் என்று கிளப்பிவிட்டார்கள்.

இன்றைய கூட்டத்தில் இதைப் பற்றிதான் மாவட்ட செயலாளர்கள் விவாதித்தனர். ரஜினி பாஜக ஆள் என்ற பிம்பம் உள்ளதால், அதை மாற்ற வேண்டும் என்று பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் கேட்டுக்கொண்டார்கள். இதை ஏற்றுதான் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை என்று ரஜினி உடனே அறிக்கை வெளியிட்டார்” என்று பெயர் சொல்ல விரும்பாத மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 

click me!