சென்னை வெள்ளத்துக்கு யார் காரணம்.. 10 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி என்ன செய்தார்? பற்றவைக்கும் பாஜக.!

By vinoth kumarFirst Published Nov 12, 2021, 12:31 PM IST
Highlights

சென்னையில் எப்போது வெள்ளம் வந்தாலும் எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியை குற்றம் சாட்டுவதும், ஆளுங்கட்சி கடந்த ஆட்சியாளர்களை குற்றம் சாட்டுவதும் தொடர் கதையாகவே உள்ளது.

 மனசாட்சி உள்ள சென்னை மாநகராட்சி அதிகாரிகள் யாரேனும் இருந்தால், மழை நீர் வடிகால்வாய்கள் மாயமானதன் மர்மத்தை வெளிப்படுத்த வேண்டும் என  நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்

கடந்த பல ஆண்டுகளாக சென்னை வெள்ளத்தில் சிக்குவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. சென்னையில் கடந்த 100 ஆண்டு கண்டிராத மழை மற்றும் வெள்ளத்தை 2015-ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு காண்பித்தது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2015-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி திறந்துவிடப்பட்ட பெருமளவு தண்ணீர் ஏற்படுத்திய பாதிப்பில் பலர் உயிரிழந்தனர். பல லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, உணவு இல்லாமல் தவித்தது இன்னமும் நம் கண் முன்னால் வந்து செல்கிறது. இந்த சம்பவம் மிக மோசமான பேரிழிவாக அப்போது பார்க்கப்பட்டது.  இந்த வெள்ள பாதிப்பிற்கு அதிமுக அரசே காரணம் என அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். 

இதனால், அரசு பெரிய பாடத்தை கற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, அதிமுக ஆட்சியில் மழை நீர் வடிகால்வாய்கள் சீரமைக்கப்பட்டது. இனி பெருமழை பெய்தாலும் சென்னையில் நீர் தேங்காது என்று எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கூறிவந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்த கனமழையால் முக்கிய பகுதிகளான தி.நகர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகள் கடல் போல் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இந்த வெள்ள பாதிப்புக்கு அதிமுக அரசு கொண்டு வந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் தான் காரணம். இதில், ஊழல் நடத்திருப்பதாக அதிமுகவை முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். 

ஆனால், எடப்பாடி பழனிசாமி கடந்த 6 மாதங்களில் திமுக எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததால் தான் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது என குற்றம்சாட்டி வருகிறார். சென்னையில் எப்போது வெள்ளம் வந்தாலும் எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியை குற்றம் சாட்டுவதும், ஆளுங்கட்சி கடந்த ஆட்சியாளர்களை குற்றம் சாட்டுவதும் தொடர் கதையாகவே உள்ளது.

இந்நிலையில், வெள்ளம் பாதிப்பு தொடர்பாக பாஜகவும் திமுக அரசை குறை கூறிவருகிறது.  சென்னை வெள்ள பாதிப்புகளுக்கு திராவிட கட்சிகளே காரணம் என்று பாஜக அதிமுகவை மறைமுகமாக விமர்சித்துள்ளது. இந்நிலையில், சென்னை வெள்ளத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் காரணம் என்றும்,  அவரது ஆட்சி காலத்தில் நிர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. 

இதுதொடர்பாக தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- கிணற்றைக் காணோம் என்ற போது சிரித்தோம். ஆனால், இன்று பல ஆயிரம் கி.மீ., மழை நீர் வடிகால்வாய்களையே காணோம். இந்தியாவின் மிகப்பெரிய பகல் கொள்ளை. மனசாட்சி உள்ள சென்னை மாநகராட்சி அதிகாரிகள் யாரேனும் இருந்தால், மழை நீர் வடிகால்வாய்கள் மாயமானதன் மர்மத்தை வெளிப்படுத்த வேண்டும்.

இந்த குற்றத்துக்கு காரணமான அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு, அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்; அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். அவன் செய்கிறானே, நான் செய்தால் என்ன என்கிற தத்துவமே, ஆக்கிரமிப்புகளுக்கும், சட்ட விரோத கட்டுமானங்களுக்கும் முதன்மை காரணம்.தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் கட்டட விதிகள் 1972ன்படி, நீர் நிலைகளில் இருந்து, 15 மீட்டருக்குள் கட்டடங்கள் கட்ட அனுமதி இல்லை என்கிற விதி, 2008ல் சென்னை பெருநகர வளர்ச்சி குழும விதிகளில் இருந்து நீக்கப்பட்டது. இதனாலேயே, நீர் நிலைகளின் அருகே கட்டடங்கள் கட்டப்பட்டு, நீர் நிலைகள் சுருக்கப்பட்டு, மழை நீர் தடுக்கப்பட்டு, கடலில் கலக்க முடியாமல் போனது. கடந்த 2008ல் தமிழகத்தில் யாருடைய ஆட்சி? என நாராயணன் திருப்பதி காட்டமாக தெரிவித்துள்ளார்.

click me!