2015 சென்னை வெள்ளத்துக்கு யார் காரணம்..? சட்டப்பேரவையில் திமுக- அதிமுக சூடான விவாதம்.!

By Asianet TamilFirst Published Aug 23, 2021, 7:44 PM IST
Highlights

சென்னையில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம் என்பது பற்றி தமிழக சட்டப்பேரவையில் சூடான விவாதம் நடைபெற்றது.
 

கடந்த 2015- ஆம் ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது. நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த வெள்ளப் பேரிடர் சென்னையைப் புரட்டிப் போட்டது. தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத் துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதத்தின்போது சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து தமிழக சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
 நந்தகுமார் (திமுக): அதிமுக ஆட்சியின் போது கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படவில்லை. 2015-ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிற்கு இது காரணமாக அமைந்தது.
எடப்பாடி பழனிச்சாமி (எதிர்க்கட்சித் தலைவர்): சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி மட்டுமல்ல, அதற்குக் கீழ் நூறு ஏரிகள் உள்ளன. அந்த ஏரிகள் எல்லாம் நிரம்பியதால்தான் நீர் வெளியேறியது.
நந்தகுமார்: செம்பரம்பாக்கம் ஏரியை உரிய நேரத்தில் திறந்து விடவில்லை. அதனால்தான் ஏரி உடைந்து நீர் வெளியேறியது.
எடப்பாடி பழனிச்சாமி: செம்பரம்பாக்கம் ஏரி உடையவில்லை. அணை நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
செல்வபெருந்தகை (காங்கிரஸ்): செம்பரம்பாக்கம் ஏரியைத் திறக்க 4 நாட்களாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதல்வரின் உத்தரவுக்காகக் காத்திருந்தனர். செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஒரே நாளில் அதிகளவு நீர் வெளியேற்றப்பட்டது.
எடப்பாடி பழனிச்சாமி: அணைகளோ ஏரிகளோ நிரம்பும்போது திறந்து விடுவது வழக்கமான நடைமுறை. அப்போது முதல்வரின் உத்தரவுக்காகக் காத்திருக்கவில்லை. பேரிடர் காலங்களில் அணைகள் நிரம்பும் போது அவற்றைத் திறக்க அதிகாரிகளே முடிவு எடுக்கலாம்.
பழனிவேல் தியாகராஜன் ( நிதியமைச்சர்): 2015-ஆம் ஆண்டின் தணிக்கை குழு அறிக்கையைச் சட்டப்படியும், மரபுப்படியும் வைத்திருக்க வேண்டும். ஆனால் வைக்கப்படவில்லை. எதிர்க்கட்சியாக இருந்த திமுக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியது. இரண்டு ஆண்டுகள் கழித்து தணிக்கை குழு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் சென்னை வெள்ளத்துக்கு இரு காரணங்கள் சொல்லப்பட்டன. 2015ஆம் ஆண்டுக்கு முன்பு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறைகூட மாநில பேரிடர் மேலாண்மை குழு கூட்டப்படவில்லை. அதனால் அவர்களுக்கு விதிமுறை தெரியவில்லை. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தபோது அதை திறக்க முதல்வரிடமிருந்து அனுமதி வரவில்லை. அதனால்தான் செம்பரம்பாக்கம் ஏரி ஒரே நாளில் திறந்துவிடப்பட்டது என அப்போது மத்திய தணிக்கை குழு அறிக்கையில் தெரிவித்தது. சென்னை வெள்ளம் பற்றி இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

click me!