டாய்லெட் முதல் சுடுகாடு வரை அடாவடி... சாட்டையை சுழற்றுவாரா மு.க.ஸ்டாலின்..!

By Thiraviaraj RMFirst Published Aug 23, 2021, 6:27 PM IST
Highlights

அரசு கழிப்பறைகள், சமூக நலக்கூட திருமண மண்டபகங்கள், சுடுகாடு வசூல், மெட்ரோ வாட்டர் என மக்களின் அடிப்படை தேவைகள் குறித்த விஷயங்களில் வசூலில் ஈடுபவது மேலும் திமுகவுக்கு கெட்ட பெயரையே ஏற்படுத்தும். 

100 நாட்களை கடந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி முன்னேறும் தமிழ்நாடு என்கிற நற்பெயரோடு ஆட்சியை நடத்தி வருகிறார் மு.க.ஸ்டாலின்.  பல துறைகளில் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. கொரோனா 2ம் அலையை லாவகமாக தடுத்து அயராது பணியாற்றியது, தேர்தல் வாக்குறுதிகளாகக் கூறிய ரூ.4000 பணம் வழங்கியது, பெட்ரோல் விலை ரூ.3 குறைத்தது, இந்தியாவிலேயே முதன்முறையாக வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்தது, வீட்டுக்கே வந்து மருத்துவசேவை உள்ளிட்ட பல வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார் மு.க.ஸ்டாலின்.

 

100 நாள் ஆட்சியில் செய்த சாதனைகளே  உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு வெற்றியை பெற்றுத் தரும் என திமுக நிர்வாகிகள் மகிழ்ந்து வருகின்றனர்.  அமைச்சர்களும் களத்தில் பம்பரமாக சுழன்று வருகின்றனர். கையூட்டு பெறக்கூடாது, அதிகாரத்துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என தமது கட்சி, ஆட்சி பதவியில் இருப்பவர்களுக்கு கிடுக்குப்பிடி போட்டு வருகிறார் மு.க.ஸ்டாலின். மக்களிடம் நற்பெயரையும் திமுக ஆட்சி பெற்று வருகிறது. இந்த நிலையில்தான் அடிப்படை நம்பிக்கைக்கே ஆப்பு வைக்கும் வகையில் அந்தந்த பகுதியை சேர்ந்த வட்டச்செயலாளர்கள் வரம்பு மீறி வசூல் செய்ய கிளம்பி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. 

’’அரசு கட்டணக் கழிப்பறைகளை கைப்பற்றி வசூல் செய்வது, சமூக நலக்கூடங்கள், திருமண மண்டபங்களின்  தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது, மெட்ரோ வாட்டர் சப்ளையை தன் வசப்படுத்திக் கொள்வது, சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படுவதற்கு கப்பம் வாங்குவது என வட்டச்செயலாளர்கள் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. இது திமுக மீது மக்களுக்கு எரிச்சலை உருவாக்கி வருகிறது.

 

ஏற்கெனவே அறிவித்த சிலிண்டர் மானியம், டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வை தமிழகத்தில் நீக்குவது, குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கவதாக அறிவித்தது, மின் கட்டணத்தை மாதாமாதம் வசூலிப்பதாக கூறியது போன்ற தேர்தல் வாக்குறுதிகளை திமுக இன்னும் நிறைவேற்றாமல் இருப்பது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் வட்டச்செயலாளர்கள், அரசு கழிப்பறைகள், சமூக நலக்கூட திருமண மண்டபகங்கள், சுடுகாடு வசூல், மெட்ரோ வாட்டர் என மக்களின் அடிப்படை தேவைகள் குறித்த விஷயங்களில் வசூலில் ஈடுபவது மேலும் திமுகவுக்கு கெட்ட பெயரையே ஏற்படுத்தும். அமைச்சர்களுக்கே கடிவாளம் போட்டு நல்லாட்சி தர அயராது உழைக்கும் மு.க.ஸ்டாலின், வட்டச்செயலாளர்களை அடக்கி வைத்து பொதுமக்களின் நற்பெயரை சம்பாதிக்க வேண்டும்’’ என்கிறார்கள் திமுக நலம் விரும்பிகள்.

click me!