ராதாபுரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ இன்பதுரையா ? அப்பாவுவா ? நாளை பிற்பகலில் ரிசல்ட் தெரியும் !!

By Selvanayagam PFirst Published Oct 3, 2019, 7:55 PM IST
Highlights

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியின் எம்.எல்.ஏ. இன்று வரைக்கும் அதிமுகவின் இன்பதுரைதான். ஆனால் அவரே தொடர்வரா அல்லது அப்பாவு எம்.எல்.ஏ. ஆவாரா என்பது நாளை 11.30 மணிக்கு மறு வாக்கு எண்ணிக்கையில் தெரியவரும்.

இன்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு தேர்தல் வழக்கில் மூன்று வருடத்துக்குள் தீர்ப்பளிக்கப்பட்டு, அதன்படி மறு வாக்கு எண்ணிக்கை நீதிமன்ற வளாகத்திலேயே நாளை நடத்தப்படுகிறது.

2016 சட்டமன்றத் தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பாக அப்பாவு போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பாக இன்பதுரை போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளர் அப்பாவு, அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இன்பதுரை 69 ஆயிரத்து 590 வாக்குகளும், அப்பாவு 69 ஆயிரத்து 541 வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக அப்போது குற்றம் சாட்டிய அப்பாவு இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தார். சென்னை உயர் நீதிமன்றத்திலும் தேர்தல் வழக்குத் தொடர்ந்தார் அப்பாவு. அம்மனுவில் தபால் வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் கோரியிருந்தார். 

இந்த வழக்கில் அப்பாவு கோரிக்கையை ஏற்று தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிமன்றம், மேலும், 19, 20 மற்றும் 21வது சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டது.

அப்போது உடனடியாக உயர் நீதிமன்றத்தில் முறையிட்ட இன்பதுரை, ‘நான் உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீட்டுக்கு செல்ல உள்ளதால் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரினார். வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதை உணர்ந்த நீதிபதி அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி விடுமுறையை அடுத்து 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இன்று அக்டோபர் 3 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கிற்கான தீர்ப்பு வரும் முன்னரே, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வான இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக் காலத் தடை விதிக்குமாறும் இதை அவசர வழக்ககாக விசாரிக்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அயோத்தி அமர்வில் இருப்பதாலும் இது தேர்தல் வழக்குதான் என்பதாலும் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த நிலையில் வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக வேட்பாளரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான இன்பதுரையின் கோரிக்கையை நிராகரித்து மறுவாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று தீர்ப்பளித்தார். தேர்தல் ஆணையத்தோடு கலந்து ஆலோசித்து நாளை காலை 11 மணிக்கு சென்னைஉயர் நீதிமன்ற வளாகத்திலேயே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

உத்தரவு கிடைத்த அடுத்த சில நிமிடங்கள் அப்பாவு தரப்பினர் உற்சாகமாகினர். ராதாபுரம் தொகுதி முடிவு மீது தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததால் தபால் வாக்குகள் ராதாபுரம் சார்-கருவூலத்திலும், மற்ற கடைசி ரவுண்டு வாக்குப்பெட்டிகள் ராமையன் பேட்டை சிவில் சப்ளைஸ் குடோனிலும் வைக்கப்பட்டிருந்தன.

உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் பேரில் வருவாய் துறை அதிகாரிகள் அங்கே சென்று போலீஸ் பாதுகாப்போடு இன்று பிற்பகலே வாக்குப் பெட்டிகளோடு சென்னைக்குப் புறப்பட்டனர். வாகனத்தின் முன்னும் பின்னரும் போலீஸுக்கு இணையாக அப்பாவுவின் ஆட்களும் கண்காணித்தபடி சென்னை நோக்கி   வந்து கொண்டிருக்கின்றனர். ராதாபுரம் சட்டமன்றத்தின் முடிவு நாளை காலை தெரிய வரும்.

click me!