கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் பொள்ளாச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் அமைச்சர் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ளயதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்
undefined
கோவையில் தனிக்கவனம் செலுத்திய திமுக தலைவர் ஸ்டாலின், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை திமுகவுக்கு பொருப்பாளராக நியமித்துள்ளார். தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜி தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இரு நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் ஆகியவற்றில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் பொள்ளாச்சி பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைமை ஏற்ற மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூறினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்பாலாஜி, ‘திமுக ஆட்சி பொறுப்பேற்று வெறும் 8 மாதங்களில் பல்வேறு நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட முதல்வர் திறம்பட செயல்பட்டு வருகிறார். மக்கள் நலனில் அக்கறை கொண்ட அவரது செயல்பாடுகளை அனைத்து தரப்பினருமே பாராட்டுகின்றனர்.
தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் தி.மு.க. மீது முழு நம்பிக்கை வைத்து வாக்களிப்பார்கள். கோவை மாவட்டத்தை பொருத்தவரை 10 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி மற்றும் 33 பேர் ஊராட்சிகளிலும் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் முழு வெற்றி பெறுவார்கள். காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்கள். தமிழகம் முழுவதிலும் 300 இடங்களில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 3 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள். இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவையில் நிச்சயம் பெரிய மாற்றம் ஏற்படும் என்று கூறினார்.
பின்னர் நிகழ்ச்சியை முடித்து விட்டு வெளியில் வரும்போது திமுகவில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்தவர்கள், போட்டியிட வாய்ப்பு கிடைக்காத திமுகவினர் ஆத்திரமடைந்து அமைச்சரை வெளியில் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி கோஷமிட்டதாக தெரிகிறது. இதனால் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட அமைச்சரை கூட்டத்தில் இருந்து வெளியில் அழைத்து வர முடியாமல் நிர்வாகிகள் திணறினர்.
பின்னர் ஒரு வழியாக நுழைவாயில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரில் அமைச்சர் ஏறினார். ஆனால் காரை வழிமறித்து ஏன் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கோவை மாவட்ட திமுகவில் பெரும் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது.