கள்ளக்குறிச்சி கலவர விஷமிகள் யார்.? தூண்டிவிட்டவங்களுக்கு இருக்கு.. இபிஎஸ் புகாருக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி

By Asianet TamilFirst Published Jul 18, 2022, 7:09 AM IST
Highlights

எடப்பாடி பழனிசாமி ஒரு மாணவியின் மரணத்தை கூட அரசியலாக்கி தன் உள்கட்சி மோதலை திசை திருப்பப் பேட்டி அளித்திருப்பதாக தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
 

கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தையும் அதன் தொடர்ச்சியாக நடந்த கலவரத்தையும் திமுக அரசு சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. தமிழகத்தில் பெண்கள், மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் எ.வ. வேலு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மாணவி மரணத்தைப் பொறுத்தவரை அந்தச் செய்தி வெளிவந்தவுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி தலைவரும், காவல்துறைக் கண்காணிப்பாளரும் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள். மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி போலீஸ் விசாரணை முடுக்கிவிடப்பட்டிருந்தது.

மாணவி மரணம் குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்றுவந்த வேளையில் பெற்றோர் தரப்பில் சி.பி.சி.ஐ.டி விசாரணை கோரி வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு விசாரணை நாளைய தினம் நடைபெறவிருக்கிறது. இதற்கிடையில் பிள்ளையை இழந்த பெற்றோரின் குடும்பத்தைத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லி மாணவியின் மரணம் குறித்த விசாரணை பாரபட்சமின்றி நடக்கும் என்று உறுதியும் அளித்துள்ளதை ஏனோ தன் கட்சியில் இருக்கும் குழப்பத்தில் மறந்துவிட்டு எந்தப் பதவியில் நாம் இருக்கிறோம் என்பது தெரியாத குழப்பத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசின் மீது வசைபாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கலவரம் ஏற்பட திமுக அரசு செய்த நான்கு தவறுகள் என்னென்ன.? பட்டியலிட்டு விளாசிய தமிழக பாஜக.!

இதற்கிடையில் அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறையை ஏற்படுத்த வேண்டும் என்று எங்கிருந்தோ தூண்டிவிடப்பட்டு வந்த சில விஷமிகள் இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ளார்கள். இதை அறிந்தவுடன் மருத்துவமனையில் இருக்கும் முதல்வர் “மக்கள் அமைதி காக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டதுடன், டிஜிபியையும், உள்துறைச் செயலாளரையும் கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வன்முறையை உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வந்து தற்போது அங்கே அமைதியை நிலை நாட்டியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது காவல்துறை நிர்வாகம் எப்படியிருந்தது என்றால் ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேரை காக்கை குருவிகள் போல் சுட்டுக் கொன்று பல நாட்கள் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க முடியாமல் அரசே தோல்வியடைந்து ஸ்தம்பித்து நின்றது.

சாத்தான்குளம் காவல் நிலைய கஸ்டடி மரணத்தில் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டையே வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல உயர் நீதிமன்றமே உத்தரவிட்ட சூழல் உருவாகி தன் கீழ் இருந்த காவல் நிலையத்தின் நிர்வாகத்தையே கோட்டை விட்டு கோட்டையில் அமர்ந்திருந்தார் பழனிசாமி. அதிமுக ஆட்சியில் குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் நான்காண்டு நிர்வாகத்தில் “டபுள் டிஜிபி” போட்டு காவல்துறையையே சீரழித்தவருக்கு இன்று திமுக ஆட்சியில் தலைநிமிர்ந்து நின்று சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டு மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினரையும், முதல்வரையும் குறை சொல்ல எந்தத் தார்மீகத் தகுதியும் இல்லை. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்த விசாரணை முடிவில் தவறு யார் மீது இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் யாருக்கும் வேண்டாம்.

இதையும் படிங்க:தமிழகத்தில் பெண்கள், மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி

குறிப்பாக எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் விஷமிகளை அனுப்பி இந்த வன்முறையைத் தூண்டிவிட்டவர்கள் யார் என்பதையும் சேர்த்தே போலீஸ் விசாரித்து வருகிறது. ஆகவே கலவரத்தில் ஈடுபட்டவர்கள், தூண்டிவிட்டவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தக்க தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என்பதோடு மாணவி மரணத்தில் நடைபெறும் சிபிசிஐடி விசாரணையின் அடிப்படையில் நிச்சயமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
 

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி விவகாரம்.. திமுக ஆட்சி வந்தது முதலே இப்படித்தான் நடக்குது.. போட்டுத்தாக்கிய வானதி சீனிவாசன்!

click me!