நீங்கள் இருக்க வேண்டிய இடம் காங்கிரஸ்... கமலுக்கு ஸ்கெட்ச் போடும் கார்த்தி சிதம்பரம்.. பின்னணி என்ன?

By Selva KathirFirst Published Dec 11, 2020, 9:44 AM IST
Highlights

ரஜினியை ஒதுக்கித் தள்ளிவிட்டு கமலுக்கு கார்த்தி சிதம்பரம் வரிந்து கட்டுவது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகத்தின் ஒரு அம்சம் என்று கூறுகிறார்கள்.

ரஜினியை ஒதுக்கித் தள்ளிவிட்டு கமலுக்கு கார்த்தி சிதம்பரம் வரிந்து கட்டுவது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகத்தின் ஒரு அம்சம் என்று கூறுகிறார்கள்.

சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் – திமுக கூட்டணி தொடரும் என்று அந்த இரு கட்சிகளின் முக்கிய தலைவர்களும், நிர்வாகிகளும் மாறி மாறி கூறி வருகின்றனர். ஆனால் உண்மை நிலைமை அப்படி இல்லை. களத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளை ஒதுக்கி வைத்தே திமுகவினர் தற்போது தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். சொல்லப்போனால் கன்னியாகுமரி தவிர பிற மாவட்டங்களில் தற்போது காங்கிரஸ் சிட்டிங் எம்எல்ஏக்கள் இருக்கும் தொகுதி கடந்த முறை காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளிலும் திமுகவினர் தேர்தல் பணிகளை துவங்கியுள்ளனர்.

இந்த தொகுதிகளில் மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியினரை அணுகாமலேயே திமுகவினர் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஒரு மரியாதை நிமித்தமாக கூட திமுக நிர்வாகிகள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளை அணுகுவதில்லை என்று சொல்கிறார்கள். இதன் மூலமே திமுக – காங்கிரஸ் உறவு தாமரை இலை தண்ணீர் போல் உள்ளதை புரிந்து கொள்ள முடியும். அது தவிர திமுக மாவட்டச் செயலாளர்கள் சிலர் வெளிப்படையாகவே திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறிவிடும் என்று கட்சியின் சக நிர்வாகிகளிடம் பேசி வருகின்றனர்.

இது தான் கள நிலவரம் என்று சொல்கிறார்கள். காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை நிச்சயம் திமுக கொடுக்கப்போவதில்லை. திமுக கொடுக்கும் தொகுதிகளை காங்கிரஸ் நிச்சயம் ஏற்கப்போவதில்லை. அப்படி என்றால் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என்கிறார்கள். அதோடு மட்டும் அல்லாமல் கடந்த வாரம் காங்கிரஸ் மேலிடப்போறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் – மு.க.ஸ்டாலின் சந்திப்பும் கூட அவ்வளவு சாதகமாக இல்லை என்றே சொல்லப்படுகிறது. கள நிலவரத்தை அறிந்து உங்களுக்கு சாதகமான தொகுதிகளை தெரிந்து கொண்டு வாருங்கள் என்று காங்., தலைவர்களை திமுக திருப்பி அனுப்பியது காங்கிரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சிவகங்கை எம்பியும் மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி ப.சிதம்பரம் கமலுக்கு நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார். கமல் இருக்க வேண்டிய இடம் அது அல்ல, எங்களுடன் வந்துவிடுங்கள் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் மீது ஒரு பிரியம் இருப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. கமலும் கூட சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் போன்றோரை சந்தித்து திரும்பியிருந்தார். இப்படி கமலும் கூட காங்கிரசுக்கு சாதகமான நிலைப்பாட்டில் தான் உள்ளார்.

அதோடு திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகநேரிட்டால் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரசுக்கு ஒரு முகம் தேவைப்படுகிறது. அந்த முகமாக காங்கிரஸ் கட்சி கமலை கருதுகிறது. கமலை முன்னிலைப்படுத்தி சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் ஒரு வியூகம் காங்கிரசுக்கு உள்ளது. இதை மனதில் வைத்து தான் கமல் தங்களுடன் வர வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் அழைத்ததாக சொல்கிறார்கள். எது எப்படியோ கமல் பிரச்சாரம், கார்த்தி சிதம்பரம் அழைப்பு என காங்கிரஸ் கட்சியும் அரசியல் களத்தில் ஆர்பரிக்க தயாராகி வருகிறது.

click me!