சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் - நாம் தமிழர் கூட்டணி..? சீமானுடன் இணைகிறாரா கமல்..?

By Asianet TamilFirst Published Dec 11, 2020, 9:14 AM IST
Highlights

சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் - நாம் தமிழர் கட்சி இடையே கூட்டணி ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. வரும் ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்காக எல்லா அரசியல் கட்சிகளும் தயாராகிவருகின்றன. கமல்ஹாசன் தற்போதே தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். வரும் 13ம் தேதி முதல் முதல் கட்டமாக மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கமல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதற்கிடையே தனித்து போட்டியிடுவதைவிட கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி கமல் தீவிரமாக யோசித்துவருவதாக கூறப்படுகிறது. இரு திராவிட கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்பதை ஏற்கனவே அறிவித்துவிட்டார் கமல். தன்னுடைய நெருங்கிய நண்பரான ரஜினி கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு இல்லை என்றே கமல் நினைத்திருந்தார். அதைக் கருத்தில் கொண்டு, ‘நண்பர் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்’ எனவும் கமல் கூறியிருந்தார். ஆனால், தற்போது  ரஜினியும் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். தமிழகத்தின் நலன் கருதி இருவரும் ஒன்று சேருவோம் என்று கமலும் ரஜினியும் முன்பு அறிவித்திருந்தார்கள்.
ஆனால், தற்போதைய நிலையில் தனித்து போட்டியிட்டு தன்னுடைய பலத்தைக் காட்டவே ரஜினி நினைக்கிறார் என்பதால், கமல் உள்பட யாருடனும் கூட்டணி அமைக்கமாட்டார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், தற்போது கூட்டணி யுகம் என்பதால், கூட்டணி அமைப்பது பற்றி கமல் தீவிர யோசனையில் உள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். கூட்டணி அமைக்க கமல் முடிவு செய்யும்பட்சத்தில் நாம் தமிழர் கட்சியுடன் சேரலாம் என்ற யோசனைகள் அக்கட்சியில் முன்வைக்கப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டு தலா 4 சதவீத வாக்குகளைப் பெற்றன. ஒட்டுமொத்தமாக 8 சதவீத வாக்குகளைப் பெற்றதன் மூலம், இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தால் பலன் கிடைக்கும் என்று யோசனைகள் இரு கட்சியிலும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.
ரஜினி கட்சித் தொடங்க கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் சீமான், கமல் கட்சி தொடங்கிய போது நேரடியாக சென்று வாழ்த்து தெரிவித்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நடுநிலை வாக்குகளை இருவரும் பெற்றதால், இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பதன் மூலம் கணிசமான வாக்குகளைப் பெற முடியும் என்ற இரு கட்சியிலும் பேசப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதன் முறை சட்டப்பேரவைத் தேர்தலில் கமல் கட்சி போட்டியிடுவதால், சில தொகுதிகளிலாவது வெற்றி பெற்று காட்ட வேண்டும் என்றும் நினைப்பதால், நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி பற்றி தீவிரமாக யோசிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் இரு கட்சிகளும் ரகசியமாகப் பேச்சுவார்த்தையை நடத்திவருவதாகவும் கூறப்படுகிறது.

click me!