டெல்லி பாஜக அலுவலகத்தில் ஒருவேளை ராஜேந்திர பாலாஜி ஒளிந்துள்ளாரா என்ற சந்தேகம் தமக்கு எழுந்துள்ளது என்று கூறி உள்ளார் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.
சிவகங்கை: டெல்லி பாஜக அலுவலகத்தில் ஒருவேளை ராஜேந்திர பாலாஜி ஒளிந்துள்ளாரா என்ற சந்தேகம் தமக்கு எழுந்துள்ளது என்று கூறி உள்ளார் எம்பி கார்த்தி சிதம்பரம்.
நாட்கள் நகர்ந்து கொண்டே இருக்கிறது.. தனிப்படையினர் தேடி கொண்டே இருக்கின்றனர். கிட்டத்தட்ட 2வது வாரமாக தேடுதல் வேட்டை தொடர்ந்தாலும் இன்னமும் காவல்துறை கையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிக்கவில்லை.
புகார்கள், வழக்குகள் என பிடி இறுக, இறுக அவர் தங்கியிருக்கும் இடங்களில் இருந்து தப்பித்துக் கொண்டே இருக்கிறார் என்பது தான் போலீசார் சொல்லும் தகவல். மற்றொரு பக்கம் ஆளும்கட்சியின் முக்கிய புள்ளிகளே அவர் எஸ்கேப் ஆக ஐடியா தருவதாகவும், போலீசாரின் ஸ்கெட்சை லீக் செய்வதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.
600 பேரிடம் விசாரணை, செல்போன்கள் தகவல் ட்ரேஸ் செய்வது, அவரது வழக்கறிஞர் நடவடிக்கைகள் என போலீசாரின் கண்காணிப்பும் தீவிரமாகி கொண்டு தான் உள்ளது. ஆனாலும் அவர் சிக்காமல் போலீசுக்கு தண்ணி காட்டி வருகிறார்.
இந் நிலையில் டெல்லி பாஜக அலுவலகத்தில் ஒருவேளை ராஜேந்திர பாலாஜி ஒளிந்துள்ளாரா என்ற சந்தேகம் தமக்கு எழுந்துள்ளது என்று கூறி உள்ளார் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம். சிவகங்கையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
கார்த்தி சிதம்பரம் கூறி இருப்பதாவது: மதமாற்ற தடை சட்டம் கர்நாடக மாநிலத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளது. கல்வி நிலையங்கள் மீது நடவடிக்கை கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது, அபாயகரமான ஒன்று.
இஸ்லாமியர்களை 2ம் தர குடிமக்களாக பாவித்து அவர்களை நடத்தும் மத்திய பாஜக அரசு இப்போது கிறித்துவர்களையும் அப்படி நடத்துவது போன்று தெரிகிறது. பாஜக அரசானது இந்து மற்றும் இந்துத்வ கொள்கைகளை மட்டும் கொண்டு இயங்குகிறது.
சிறுபான்மையின மக்களுக்கு என்றும் பக்கபலமாகவும், உறுதுணையாகவும் இருக்கும் கட்சி காங்கிரஸ்தான். கர்நாடகாவில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் வென்று காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்.
எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் என்ற இரட்டை தலைமை அதிமுகவுக்கு சரிவரவில்லை. வாக்கு வங்கி இருந்தும் அக்கட்சிக்கு தற்போது சரியான தலைமை இல்லை. எப்போது ரெய்டு, எங்கே ஒளியலாம் என்பதே அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு பிரச்னையாக இருக்கிறது.
மக்களின் முதல்வராக, எளிய முதல்வராக ஸ்டாலின் உள்ளார். எளிதாக மக்கள் அவரை அணுகும் வகையில் அவரது செயல்பாடுகள் இருக்கின்றன. தமிழ்நாடு காவல்துறை மிகவும் திறமை வாய்ந்தது.
ஆனால் ஏன் இன்னமும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க முடியவில்லை என்று தெரியவில்லை. இது ரொம்பவும் விசித்திரமாக இருக்கிறது. டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் ராஜேந்திர பாலாஜி உள்ளாரோ என சந்தேகம் வருகிறது. காரணம் அங்கு தான் போலீசார் செல்ல தயங்குவார்கள் என்று கார்த்தி சிதம்பரம் கூறி இருக்கிறார்.