சட்டப்பேரவைக் கூட்டமா.. பொதுக்குழு கூட்டமா..? அதிமுகவை நெருக்கும் இரு கூட்டங்கள்!

By Asianet TamilFirst Published Jun 10, 2019, 7:08 AM IST
Highlights

ஜெயலலிதா இருந்தவரை ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் இறுதியில் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவார். அதுபோல கடந்த ஆண்டு இறுதியில் பொதுக்குழு கூட்டம் கூட்டப்படவில்லை. மாறாக, பொதுக்குழு கூட்டம் நடத்த கால அவகாசம் கேட்டு அதிமுக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியது.  
 

சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அதிமுகவுக்கு நெருக்கடி அளிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில்,  தேர்தல் ஆணையத்தில் அதிமுக அளித்த உறுதியின்படி இந்த மாதம் இறுதிக்குள் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2016 டிசம்பர் இறுதியில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்தார்கள். பிறகு கட்சி பிளவுக்கு பிறகு 2017 ஆகஸ்ட்டில் இபிஎஸ் - ஓபிஎஸ் அணிகள் இணைந்தன. இதன்பிறகு பொதுக்குழு கூட்டம் நடத்தி ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை ஏற்படுத்தினார்கள். அதன் பிறகு அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்படவேயில்லை.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி அரசியல் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறையாவது பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதன்படி கடந்த ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை அதிமுக கூட்டியிருக்க வேண்டும். ஆனால், பொதுக்குழுவை கூட்டவில்லை. ஜெயலலிதா இருந்தவரை ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் இறுதியில் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவார். அதுபோல கடந்த ஆண்டு இறுதியில் பொதுக்குழு கூட்டம் கூட்டப்படவில்லை. மாறாக, பொதுக்குழு கூட்டம் நடத்த கால அவகாசம் கேட்டு அதிமுக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியது.

 
அந்தக் கடித்ததில், ‘கஜா புயலால் தமிழகத்தின் பல பகுதிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுக்குழுவை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடத்தி முடிக்கப்படும்’ என்று அக்கடிதத்தில் அதிமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. 
இதன்படி அதிமுக இம்மாதம் 30-ஆம் தேதிக்குள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும். ஏற்கனவே சட்டப்பேரவை கூட்டத்தை அதிமுக எப்போது கூட்டும் என்று தகவல் வெளியாகவில்லை. சட்டப்பேரவைக் கூட்டத்தில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் காத்திருக்கிறது. அதில் வெல்ல திமுக வியூகம் வகுத்துவருவதாக தகவல் வெளியாகிவருகிறது. எனவே அதை முறியடிப்பது தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் இபிஎஸ் தொடர்ந்து பேசிவருகிறார்.  சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் அறிக்கை வெளியிட்டு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்.


இந்நிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் எனவும், அதை பொதுக்குழுவில் வலியுறுத்தோம் என்று எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, ராமச்சந்திரன் ஆகியோர் வலியுறுத்திருப்பது அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே நாளை மறுதினம் மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு அதிமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இக்கூட்டத்தில் பொதுக்குழுவைக் கூட்டுவது தொடர்பாக முடிவு எடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதேபோல சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டுவது தொடர்பாகவும் பேசப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

click me!