பித்தம் தலைக்கேறி பிதற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு உதவி செய்திடக்கூடாதல்லவா? ஸ்டாலினை விமர்சித்த சென்டிமென்ட் அறிக்கை!!

By sathish kFirst Published Jun 9, 2019, 5:31 PM IST
Highlights

நம் எதிரிகளும் கூட நம்மைப் போல் இருக்க ஆசைப்பட்டார்கள், நாம் ஒரு தாய் மக்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் என சென்டிமென்ட்டாக அறிக்கைவிட்டுள்ளது அதிமுக தலைமை.

அதிமுகவுக்கு தேவை ஒற்றைத் தலைமைதான்; இரட்டை தலைமை இருப்பதால் முடிவுகள் எடுப்பதில் தாமதமாகிறது என்று எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா போர்க்கொடி தூக்கி இருந்தார். இதற்கு அதிமுக அமைச்சர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.  

இந்த விஷயம் அடுத்த கட்டத்துக்கு செல்வதைத் தவிர்க்கும் விதமாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களின் உழைப்பால் தழைத்தோங்கும் ஒப்பற்ற பேரியக்கம். எம்.ஜி.ஆரால் தமிழ் நாட்டு மக்களின் பேராதரவோடு உருவாக்கிய இயக்கமே அதிமுக. எம்.ஜி.ஆர். 1972-ஆம் ஆண்டு தமிழ் நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவோடு இந்த இயக்கத்தைத் தொடங்கியபோது அவருக்கு, ஸ்ரீராமனுக்கு உதவிய அணிலாக துணை நின்ற பலர் இன்றும் அந்த நாள் நினைவுகளை பசுமையாக இதயத்தில் கொண்டிருக்கிறோம். எத்தனை, எத்தனை அடக்குமுறைகளையும், அராஜகத்தையும், வன்முறை வெறியாட்டத்தையும் துச்சமென எதிர்கொண்டு சாதாரண ஏழை, எளிய தொண்டனின் இரத்தத்தாலும், வியர்வையாலும், உயிர் தியாகத்தாலும் இந்த இயக்கம் இத்தனை பெரிய வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்கையில் வலியும், வேதனையும் அதே நேரத்தில் பெருமிதமும், ஆனந்தமும் உண்மையான கழகத் தொண்டன் ஒவ்வொருவர் நெஞ்சிலும் அலை, அலையாய் எழுகின்றன.

எம்ஜிஆரின்  மறைவுக்குப் பிறகு பல்வேறு போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்து, தனது வாழ்வையே கழகத்திற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் அர்ப்பணித்து அதிமுக ஆயிரம் காலத்துப் பயிர் என்பதை உறுதிசெய்த ஜெயலலிதாவின் உழைப்பை நாம் எல்லாம் கண்கூடாகக் கண்டோம். தனது வாழ்வின் இறுதி மூச்சு உள்ளவரை கழகப் பணிகளில் கண்ணும் கருத்துமாக, ஜெயலலிதா பாடுபட்டதை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. 

தனது மரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்புகூட அவர் தேர்தல் பணிகளில் முழு மூச்சாய் ஈடுபட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர் வெற்றியை நமக்கு உரித்தாக்கினார் என்பதை எண்ணிப்பார்க்கையில் இதயம் விம்முகிறது.

ஜெயலலிதா அகால மரணம் கழக உடன்பிறப்புகளை அரசியல் அனாதைகளாக்கிவிடும் என்று பலரும் பகற்கனவு கண்டுகொண்டிருந்த நேரத்தில் நாம் கழகத்தைக் காப்பாற்றினோம். எம்ஜிஆர் கண்ட வெற்றிச் சின்னமாம்.

இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுத்தோம். “இந்த ஆட்சி இன்னும் எத்தனை நாளைக்கு?” என்று எகத்தாளம் பேசியவர்களையும், “தீபாவளிக்குள் கலைந்துவிடும்”, “பொங்கலுக்குள் போகிப் புகையாகிவிடும்” என்று ஆரூடம் கூறியவர்களையும் வாயடைக்கச் செய்யும் வகையில் ஜெயலலிதாஅமைத்துத் தந்த அரசைக் காப்பாற்றினோம். நாடு போற்றும் நம் நல்லாட்சி இதோ நான்காம் ஆண்டில் வெற்றிநடை போடுகிறது. நாம் எவ்வளவு எளிய பின்னணியைக் கொண்டவர்களாக இருந்தபோதிலும் நமது கொள்கைப் பற்றாலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களிடம் நாம் கற்ற பாடத்தாலும்தான் இவை எல்லாம் சாத்தியமாயிற்று.

அதிமுக இராணுவக் கட்டுப்பாட்டுடன் செயல்படும் ஒப்பற்ற இயக்கம் என்றும்; தலைமைக்கும், கொள்கைக்கும் என்றென்றும் விசுவாசமாய் செயல்படும் தொண்டர்களைக் கொண்ட நிகரில்லாத இயக்கமென்றும் எல்லோரும் நம்மைப் பார்த்து வியந்தார்கள். நம் எதிரிகளும் கூட நம்மைப் போல் இருக்க ஆசைப்பட்டார்கள்.

கடந்த சில நாட்களாக கழக உடன்பிறப்புக்கள் சிலர் கழகத்தின் செயல்பாடுகளைப் பற்றியும், இனி என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டுவரும் கருத்துக்கள் அவ்வளவு வரவேற்கத் தக்கவையாக இல்லை. கழக உடன்பிறப்புக்கள் ஒவ்வொருவருக்கும் கழகத்தின் மீது அளப்பரிய அன்பும், பற்றும் இருக்கிறது என்பதையும், அந்த உணர்வுகளின் காரணமாகத்தான் இத்தகைய கருத்துக்களை கூறி வருகின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. இருந்தாலும் இடம், பொருள், ஏவல் அறிந்து நாம் செயல்படவேண்டும்!

ஊர் இரண்டுபட்டால் யாருக்குக் கொண்டாட்டம் என்பதை எல்லோரும் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம். நம்மை அழிக்கை நினைப்பவர்களுக்கும், ஒரு நாளேனும் முதலமைச்சர் பதவியில் அமர்ந்துவிட வேண்டும் என்று பித்தம் தலைக்கேறியவர்களாய் பிதற்றிக் கொண்டிருப்பவர்களுக்கும் நம்முடைய சொல்லும், செயலும் உதவி செய்திடக்கூடாதல்லவா?

கட்டுப்பாடும், ஒழுங்கும் கட்டாயம் நமக்குத் தேவை. இவை சாதரணமானவைதான். ஆனால், இம்மாதிரி சாதாரண விஷயங்களைக் கொண்டுதான் ஓர் இயக்கத்தை உலகம் எடைபோடும். கழகத்தின் நலன் கருதி சில கருத்துக்களை யார் கூற விரும்பினாலும், அதற்கென ஒரு நேரமும், சந்தர்ப்பமும் செயற்குழு-பொதுக்குழு-ஆலோசனைக் கூட்டம் என்று
பல்வேறு வாய்ப்புகளும் இருப்பதை அன்புகூர்ந்து நினைவில் கொள்ளுங்கள்.

நம்முடைய பொதுவாழ்வு என்பது புனிதமானது. அரசியல் மூலம் நாம் வேண்டுவது சில்லரைப் பதவிகளையல்ல, சிங்கார வாழ்வையல்ல. நம் இனத்தின் விடுதலையை நாம் தேடுகிறோம். அந்தத் தேடலில் நமக்குத் துணை செய்யவே பதவியும், அரசும் என்பதை அறிந்திருக்கிறோம். நாம் ஒரு தாய் மக்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். கழகத்தின் கடைசித்
தொண்டனின் உணர்வுகளையும், அவனது எதிர்ப்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில்தான் நம் பணிகள் அமைந்திருக்கின்றன.

கழக உடன்பிறப்புக்கள் இனி கழக நிர்வாக முறைகளைப் பற்றியோ, தேர்தல் முடிவுகளைப் பற்றிய தங்கள் பார்வைகளைப் பற்றியோ, கழகத்தின் முடிவுகளைப் பற்றியோ, பொது வெளியில் கருத்துக்களைக் கூறாமல் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் செயல்பட்டதைப் போன்றே தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

click me!