
மாட்டுக்கறி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்…சொல்கிறார் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்….
அசைவ உணவுகளை உண்பதால் பல்வேறு வகையான புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
இறைச்சிக்காக பசு, எருது, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை விற்பனை செய்யக் கூடாது என்று மத்திய அரசு பிறப்பித்த உத்தரவால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
கேரளா, மேகாலயா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் மத்திய அரசின் இந்த சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சட்டப் பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் , பொதுவாக அசைவத்தைக் காட்டிலும் சைவ உணவுப் பழக்கமே சிறந்தது என தெரிவித்தார்.
மேலை நாடுகளில் பெரும்பாலானோர் தற்போது சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறி வருவதே அதற்குச் சான்று என்று தெரிவித்த அவர்.
ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, பல்வேறு வகையான புற்றுநோய்கள் வருவதற்கும், அசைவ உணவுப் பழக்கத்துக்கும் நிறைய தொடர்புகள் உள்ளதாக கூறினார்.
எந்த வகை உணவை உண்ண வேண்டும் என்பது தனிநபர் விருப்பம் சார்ந்தது. இந்த விவகாரத்தைப் பொருத்தவரை மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும் என்பதோ, வர்த்தக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதோ அரசின் நோக்கமல்ல என்றும் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.