பள்ளிகள் திறக்கப்படுகிறதா? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்..!

By vinoth kumarFirst Published Jul 29, 2021, 3:18 PM IST
Highlights

அரசுப்பள்ளிகள் இன்னும் 2 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தப்படும். அரசு பள்ளிகளில் சேர சிபாரிசு வரும் நிலையும் ஏற்படும். 

பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

தஞ்சாவூர் அருகே கள்ளபெரம்பூர் பகுதியில் உள்ள ஏரியில் தூர் வாரும் பணியை இன்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- 9 முதல் 12 ம் வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்காக வகுப்புகள் திறப்பது குறித்து ஏற்கனவே துறை ரீதியாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர் எனக் கூறப்படுகிறது. கொரோனா தடுப்பூசி 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இருந்தாலும், எந்த அளவுக்கு இருக்கும் என தெரியவில்லை.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் போது எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ, அதே அளவுக்குப் பள்ளிகள் திறப்பதிலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது. மருத்துவ குழுவினருடன் ஆலோசனை செய்து, முதல்வர் என்ன சொல்கிறாரோ அதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.

பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணிநிரவல் செய்யப்பட்ட பிறகுதான் எங்கெங்கு காலி பணியிடங்கள் உள்ள விபரம் தெரியவரும். அதன் அடிப்படையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். அரசுப்பள்ளிகள் இன்னும் 2 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தப்படும். அரசு பள்ளிகளில் சேர சிபாரிசு வரும் நிலையும் ஏற்படும். அரசு பள்ளிகளில் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலையும் கற்றுத்தர முயற்சிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

click me!