தேர்தல்ல என்னல்லாம் செய்யணும்..! குஜராத் தொண்டருக்கு தனிப்பட்ட வகையில் கட்டளையிடும் மோடி... வைரலாகும் செல்போன் பதிவு!

First Published Oct 26, 2017, 6:15 PM IST
Highlights
When PM Modi made a phone call to a BJP worker ahead of Gujarat Assembly election


குஜராத்தில் இப்போது தேர்தல் காய்ச்சல் தொற்றிக் கொண்டுள்ளது. ஆளும் பாஜக.,வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேதான் போட்டி. என்றாலும் ஒருவரை ஒருவர் தாக்கி பேட்டி அளிப்பதிலும், தகவல்களைப் பரப்புவதிலும் தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்று காட்டிக் கொண்டிருக்கின்றனர். 

இத்தகைய சூழலில், பிரதமர் மோடி தனது குஜராத் மாநில தொண்டர் ஒருவருக்கு தீபாவளி நேரத்தில் வாழ்த்து சொல்லி திடீரென போன் செய்துள்ளார். அவருடன் உரையாடி அவருக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், நாட்டு நிலவரம் குறித்துப் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியவற்றின் ஒலிப்பதிவு இணையத்தில் வைரலாகப் பரவியுள்ளது. 

பாஜக., தொண்டர் கோபால்பாய் கோஹில் அந்த தருணத்தை நிச்சயம் மறக்க மாட்டார்தான். திடீரென நாட்டின் பிரதமரிடம் இருந்து போன் கால் வந்தால்..? ஆச்சரியமும் அதிர்ச்சியும் அவரை மூழ்கடித்தது. இந்த ஆடியோ வாட்ஸ் அப் மூலம் வைரலானது.

தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவிக்க, திடீரென போன் செய்த மோடி, குஜராத்தில் உள்ள வடோதராவில் வசிக்கும் முன்னாள் நண்பர் கோஹில் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் பேசுகிறார். அக்டோபர் 19ம் தேதி பிற்பகல் 4.30 மணி அளவில் அந்த போன் கால் வருகிறது. சுமார் 10 நிமிடங்கள் அந்த உரையாடல் நீடிக்கிறது. அந்தக் குரலைக் கேட்ட உடன் கோஹிலுக்கு அவர் கால் தரையிலேயே இல்லை. உற்சாகத்தில் துள்ளுகிறார். 

குஜராத்தியில்தான் அந்த உரையாடல் உள்ளது. பால்ய வயதுத் தோழருடன் அதே வயது நட்பு முறையில் அந்த உரையாடல் நடக்கிறது. குடும்ப விஷயங்கள் பேசிய பின்னர் நாட்டு நடப்பு அரசியல் என்றெல்லாம் பேச்சு வளர்கிறது. 

வடோதரா நகரில் ஸ்டேஷனரி கடை வைத்து வியாபாரம் செய்யும் கோஹில் வடோதரா நகரின் வார்டு மட்டத்திலான பாஜக தொண்டர். குஜராத் முதல்வராக மோடி இருந்த போது, 2011ல் சத்பாவனா என்ற உண்ணாவிரத நிகழ்ச்சியில் மோடியை சந்தித்து அன்புடன் உரையாடியுள்ளார். அதன்பின் நட்பு முறையில் அவருடன் சில நிகழ்வுகளில் கலந்து கொண்டு, புகைப்படம் எடுத்து வைத்துள்ளார். 

பின்னர் 2014ல் வடோதராவில் நாடாளுமன்ற தேர்தலில் மோடி போட்டியிட்ட போது, கோஹில் உடன் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டாராம். அதை நினைவில் வைத்துக் கொண்டு, தீபாவளிக்கு திடீரென போன் செய்து கோஹிலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் மோடி. 

ஆனால், அந்த ஆடியோவில் இப்போது கோபால்பாய் கோஹில் தொடர்பில் உள்ளார் என்றும், உரையாடலின் முடிவில், அழைப்பு நிறைவடைந்தது என்ற ரீதியிலும் ஆங்கிலத்தில் பதிவுகள் உள்ளன. கோஹிலும் மோடியும் பேசிய உரையாடல் கோஹிலின் வாட்ஸ் அப் எண்ணுக்கு வந்தபோது, அதைக் கேட்ட கோஹில் மேலும் ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தார். அதனை உடனே தனது நண்பர்களின் எண்ணுக்கு பார்வர்ட் செய்து மகிழ்ந்தார். 

அந்த ஆடியோவில் வரும் தேர்தலில், வளர்ச்சியையும், பாஜக.,வின் பாஸிடிவ்வான நல்ல செயல்களையும் வைத்து பிரசாரம் செய்யுங்கள், காங்கிரஸ் சொல்லும் குற்றச்சாட்டுகளை கவனத்தில் கொள்ளாதீர்கள், புறக்கணித்துவிட்டு, செயலில் மட்டும் ஈடுபடுங்கள் என்று பேசி முடிக்கிறார் மோடி. 

அப்போது, தங்களைப் பற்றி தவறான கருத்தை உருவாக காங்கிரஸார் பிரசாரம் செய்கின்றனர் அது என் மனதைப் பாதிக்கிறது என்று கோஹில் சொல்லும் போது, அதற்கு மோடி, ஜன சங்கம் தொடங்கிய காலத்தில் இருந்தே இத்தகைய தாக்குதல்களை எதிர்கொண்டதுதான். என்னை என்னவெல்லாம் சொல்லி திட்டியிருக்கிறார்கள்... கொலைகாரன் என்றார்கள். மரண வியாபாரி என்றெல்லாம் திட்டினார்கள். ஆனால் நாம் அதை மனதில் வைத்துக் கொண்டிருந்தால், இந்த வளர்ச்சி எல்லாம் சாத்தியமா? மக்களுக்காக நாம் சேவை செய்கிறோம். இதுபோன்ற நெகட்டிவ்வான விஷயங்களை மனதில் போட்டுக் கொண்டிருந்தால், நாம் நிச்சயம் எந்த முன்னேற்றகரமான செயலையும் செய்ய மாட்டோம். எனவே அதை எல்லாம் விட்டுத் தள்ளி, செயலில் வேகம் காட்டி நல்லது செய்யுங்கள். உங்கள் தேர்தல் பிரசாரம் வளர்ச்சியை முன்னிலைப் படுத்துவதாக இருக்கட்டும். காங்கிரஸாரின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் இருக்க வேண்டாம்” என்று டிப்ஸ் கொடுக்கிறார். 

வைரலாகப் பரவியுள்ள இந்த ஆடியோவே, மோடியின் பிரசார உத்திதான் என்று கலாய்க்கிறார்கள் வட நாட்டு சமூக ஊடகங்களில்!

click me!