
தமிழகத்தில் எத்தனை தேர்தல் வந்தாலும் அதிமுகதான் ஆட்சி அமைக்கும் என்றும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம், சேலம், கடலூர் உள்ளிட்டமாவட்டங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டையில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், நாங்கள் அரசியல் பேசவில்லை என்றும் உண்மையைத்தான் பேசுகிறோம் என்றும் கூறினார்.
தமிழகத்தில் எத்தனை தேர்தல் வந்தாலும் அதிமுகதான் ஆட்சி அமைக்கும் என்றார். தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்ற தனியாக கட்சி தொடங்கி ஆட்சி பிடித்தவர் எம்.ஜி.ஆர். என்றும் ஓபிஎஸ் கூறினார்.
துரோகிகளின் துணையோடு ஆட்சியைக் கலைக்கலாம் என்று நினைத்தவர்களின் கனவு நிறைவேறாமல் போய்விட்டது என்றும் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.