ஆளுநரை ஒரு பொருட்டாக நினைக்காத குமாரசாமி... அமித் ஷா உதவியை நாடும் ஆளுநர்... கர்நாடகாவில் அடுத்து என்ன?

By Asianet TamilFirst Published Jul 21, 2019, 12:00 PM IST
Highlights

ஆட்சியை கலைப்பது, சட்டப்பேரவையை முடக்குவது போன்ற நடவடிக்கைகள் தேவைப்படும்போதுதான் மத்திய அரசின் தலையீடு தேவை என்று ஆளுநர்கள் அறிக்கை அனுப்புவது வழக்கம். அந்த அடிப்படையில் குமாரசாமி அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே ஆளுநர் அறிக்கை அளித்திருப்பது தெளிவாகிறது. 

மெஜாரிட்டியை நிரூபிக்க இருமுறை உத்தரவிட்டும் அதை மீறிய கர்நாடக அரசு விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கர்நாடக ஆளுநர் வஜூவாலா பாய் அறிக்கை அனுப்பியுள்ளார்.
கர்நாடகாவில் 119 உறுப்பினர்கள் ஆதரவுடன் ஆட்சி நடத்திவந்த குமாரசாமி அரசுக்கு, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் ஆதரவு விலகல் போன்ற காரணங்களல் குமாரசாமி கலகலத்துவிட்டுவிட்டது. தற்போதைய நிலையில் 102 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே குமாரசாமிக்கு உள்ளது. பாஜகவுக்கு சுயேட்சைகளின் ஆதரவுடன் 107 உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் குமாரசாமி தன் அரசுக்கு பெரும்பான்மை உள்ளதாக கூறி 18-ம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

 
ஆனால் கொறடா உத்தரவு சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பற்றி தெளிவான உத்தரவை பெற வேண்டும் என சட்டப்பேரவையில் காங்கிரஸ் கூறியதால், அன்றிய தினம் விவாதம் மட்டுமே நடந்தது. நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தும் விஷயம் திசை மாறியதால், ஆளுநர் நேற்று முன்தினம் மதியம் 1:30 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று குமாரசாமிக்கு உத்தரவிட்டார். ஆனாலும், நம்பிக்கை வாக்கெட்டுப்பு நடைபெறவில்லை. இதையடுத்து மாலை 6:00 மணிக்குள் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்று இரண்டாவது முறையாக முதல்வருக்கு ஆளுநர் கடிதம் அனுப்பினார்.

 
அதையும் புறக்கணித்தவிட்ட குமாரசாமி அரசு, சபாநாயகர் உதவியுடன் திங்கள் கிழமைக்கு பேரவையை ஒத்திவைத்துவிட்டது. இரண்டு முறை தான் அனுப்பிய கடிதங்களையும் முதல்வர் புறக்கணித்துவிட்டதால், கடும் அதிருப்தி அடைந்தார் ஆளுநர். நாளை சட்டப்பேரவையில் என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில், கர்நாடக நிலவரம் குறித்து ஆளுநர் மத்திய உள்துறைக்கு அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், “முதல்வர்குமாரசாமி அரசியல் சாசனத்தை மீறிவிட்டார். மாநிலத்தில் அரசியல் சட்ட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குமாரசாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால் முக்கிய தீர்மானங்கள் எதையும் எடுக்கக் கூடாது எனத் தலைமை செயலாளருக்கு அறிவுறுத்தினேன். அதையும் மீறி அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில், மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும்” என்று அந்த அறிக்கையில் ஆளுநர் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
ஆட்சியை கலைப்பது, சட்டப்பேரவையை முடக்குவது போன்ற நடவடிக்கைகள் தேவைப்படும்போதுதான் மத்திய அரசின் தலையீடு தேவை என்று ஆளுநர்கள் அறிக்கை அனுப்புவது வழக்கம். அந்த அடிப்படையில் குமாரசாமி அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே ஆளுநர் அறிக்கை அளித்திருப்பது தெளிவாகிறது. என்றாலும், திங்கள் கிழமை சட்டப்பேரவையில் நடக்கும் விஷங்களைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!