ஸ்டாலினுக்கு எதற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு? தாறுமாறு கேள்விகேட்டு தெரிக்கவிட்ட தமிழிசை

First Published Apr 14, 2018, 12:25 PM IST
Highlights
What was the police protection for Stalin


திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சுற்றி ஏன் அவ்வளவு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்? என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை கேள்விகளால் தெறிக்கவிட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும்நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்காகப் வந்திருந்த பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் கறுப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டன. கறுப்பு பலூன்களையும் பறக்கவிட்டனர். பல்வேறு இடங்களிலும் வீடுகளிலும் கறுப்புக் கொடியும் ஏற்றப்பட்டிருந்தது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், “பிரதமர் தன் வாழ்நாளில் சந்தித்திராத எதிர்ப்பைச் சந்தித்திருப்பார்” என்று குறிப்பிட்டிருந்தார். “ஆகாயத்திலே பறந்துகொண்டிருக்க முடியாது. ஓட்டு கேட்க கீழிறங்கி வந்தாகத்தான் வேண்டும்” என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் பிரதமருக்கு எதிரான போராட்டத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் நேற்று  செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, “தமிழகத்துக்குப் பெருமைக்கு சேர்க்கும் வகையில் ராணுவக் காட்சி நடந்துவரும் நேரத்தில், பிரதமருக்குக் கறுப்புக் கொடி காட்டுகிறோம் என்று கூறி தமிழகத்தின் பெருமைக்குச் சிறுமை சேர்த்துள்ளனர்” என்று கண்டனம் தெரிவித்தார்.

திமுகவும் காங்கிரஸும் தங்களின் தவறை மறைக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹாஷ்டேக்கில் டிரெண்ட் ஆக்கிவிட்டோம் என்று கூறுகிறார்கள். ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது இவர்களின் பிரச்சினையல்ல. மோடியை விமர்சனம் செய்ய வேண்டும் என்பதே இவர்களின் ஒரே நோக்கம். இவர்கள்  என்ன செய்தாலும் பிரதமரின் பெருமையைக் குறைக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும், “50 வருடங்களாக ஆட்சியைக் கையில் வைத்துக் கொண்டிருந்தவர்கள் காவிரிப் பிரச்சினைக்கு எதுவும் செய்யவில்லை. யார் காவிரி பிரச்சினையைத் தீர்த்து வைக்கவில்லையோ. அவர்கள்தான் தற்போது நடை பயணம் மேற்கொள்கின்றனர். பிரதமர் பாதுகாப்பு காரணங்கள் கருதி ஹெலிகாப்டரில் செல்கிறார். காவிரிக்காக உயிரைத் துச்சமென மதித்துத்தான் ஸ்டாலின் அவர்கள் நடை பயணம் செல்கிறார்.

ஆமாம் நான் தெரியாமல் தான் கேட்கிறேன் அவரைச் சுற்றி ஏன் அவ்வளவு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்? தொண்டர்களோடு தானே செல்கிறீர்கள். உங்கள் தொண்டர்கள் உங்களுக்குப் பாதுகாப்பு இல்லையா? ஸ்டாலினுக்கே இவ்வளவு பாதுகாப்பு தேவைப்படும்போது நாட்டை ஆளும் பிரதமருக்குப் பாதுகாப்புத் தேவைப்படாதா?” என தமிழிசை தாறுமாறாக பேசினார்.

click me!