புரளி கிளப்பியே வாக்குகளை திசைதிருப்பிய தினகரன் தரப்பு! அதிமுக.,வினர் கொதிப்பு!

First Published Dec 26, 2017, 3:22 PM IST
Highlights
what type of tactics done by dinakaran supporters in rk nagar elections admk people murmuring


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒரு சுயேச்சை வேட்பாளரான தினகரன் எப்படி வெற்றி பெற்றார்; அதுவும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட அதிமுக.,வும், பல கட்சிக் கூட்டணியுடன் போட்டியிட்ட திமுக.,வும் இருக்கும் போது... என்று அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய அலசல்களை அதிமுக.,வும் திமுக.,வும் தங்கள் கட்சி அலுவலகங்களில் அமர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறார்கள். 

திமுக., ஒரு புறம் தோல்விக்கான காரணங்களை அடுக்குகிறது என்றால், அதிமுக.,வினர் அடுக்குவதோ சோக மயமானது. இவ்வளவு செய்தும், இரட்டை இலையும் அதிகாரமும் கையில் இருந்தும் ஒரு இடைத்தேர்தலில் இப்படி ஒரு தோல்வியை சந்திக்க நேர்ந்ததே என்பதற்கான காரணங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் காரணங்களில் ஒன்று, அரசியல் உத்தி என்பதைவிட எதிரணியை வீழ்த்தும் பிரசார உத்தி என்று சொல்லலாம். 

ஆர்.கே.நகரில் பிரசாரம் முடிவடைய இருந்த கடைசி இரு தினங்களில், அதிமுக.,வினர் பணப் பட்டுவாடாவில் ஈடுபடுவதாக பரவலாகக் கூறப்பட்டது. குறிப்பாக  அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக., பெருந்தலைகள் எப்படி பண விநியோகத்தில் ஈடுபடுகிறார்கள் என்று தினகரன் தரப்பு புகார் கூறியதாகவும், ஊடகங்களில் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியும் பேசினார்கள். 

ஆனால், அதிமுக.,வினர் சிலர் இப்போது புலம்புவதுதான் வேடிக்கையான ஒன்று. அதிமுக.,வுக்கு என்றே வாக்களிக்கும் விசுவாசிகளும் கூட, தினகரனுக்கு ஓட்டு போட்டதால் தான் இத்தகைய  வெற்றியை தினகரன் பெற முடிந்தது. அதற்காக, தினகரன் அடிக்கடி சொல்லும் ஸ்லீப்பர் செல்கள் அதிமுக.,வில் வேலை செய்தனராம். அதிமுக.,வுக்கு என்றே வாக்களிக்கும் நபர்களைக் கண்டறிந்து, அவர்களில் ஒரு லட்சம் பேருக்கு தலா ரூ.6 ஆயிரம் ஒதுக்கி, ஒரு லட்சம் ஓட்டுகளும் அதிமுக.,வுக்குக் கிடைக்க வேண்டும் என்று வேலை செய்வதாக ஒரு செய்தி பரப்பப் பட்டது. அப்போது, அதிமுக., விசுவாசிகளிடமே போய் தினகரன் ஆதரவாளர்கள் ஒரு புரளியைப் பரப்பினார்கள். 

அதாவது, அதிமுக., சார்பில்  அந்த வீட்டில் உள்ளவங்களுக்கு ஒருவருக்கு 6ஆயிரம் வீதம், 4 பேருக்கு 24 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்காங்க.. நீங்க இவ்ளோ தூரம் அதிமுக.,வுக்கு விசுவாசியா இருக்கீங்க. ஆனா உங்களுக்குக் கொடுக்காம, அவங்களுக்கெல்லாம் கொடுத்திருக்காங்க... என்று, அதிமுக., விசுவாசிகளை சரியாகக் கண்டறிந்து புரளி பரப்பினார்களாம். இதனால், தங்களுக்கு பணம் கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில், அதிமுக.,க்கு ஓட்டு போட்டு வந்த பலர் தினகரனுக்கு மாற்றிப் போட்டதாகக் கூறியுள்ளனர். 

இதனை செய்தியாளர்களிடம் வெளிப்படையாகச் சொல்லியுள்ளார் தண்டையார்பேட்டை பகுதி வாக்காளர் பெண் ஒருவர். அதில், எங்கள் வீட்டில் ஆறு ஓட்டுகள் உள்ளன. 'குக்கருக்கு' ஆதரவாக பிரசாரத்திற்கு போனதால், எங்களுக்கு அதிமுக.,வினர் ரூ.6 ஆயிரம் தரவில்லை. ஜெயலலிதா விசுவாசியான எங்களுக்கு பணம் கொடுக்காத கோபத்தில் குக்கருக்கு ஓட்டு போட்டோம்... என்று கூறியுள்ளார். 

இப்படி, எத்தனை எத்தனை தில்லுமுல்லு..? தினகரன் தரப்பு செய்துள்ளது என்று புலம்புகிறார்கள் அதிமுக.,வினர். 

click me!