கேரளாவில் தங்கதமிழ்ச்செல்வன்... அடுத்தகட்ட நடவடிக்கை என்ன..? முக்கிய அரசியல் கட்சியுடன் பேச்சுவார்த்தை என தகவல்!

By Asianet TamilFirst Published Jun 26, 2019, 8:33 AM IST
Highlights

திமுக, அதிமுக என இரு தரப்புடனும் தங்க தமிழ்ச்செல்வன் பேசிவருவதாக தகவல் கிடைத்ததால், டிடிவி தினகரன் இந்த முடிவுக்கு வந்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 

அமமுகவிலிருந்து தங்க தமிழ்ச்செல்வன் நீக்கப்படுவார் என டிடிவி தினகரன் சூசகமாகத் தெரிவித்துவிட்ட நிலையில், தங்க  தமிழ்ச்செல்வன் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக தற்போது கேரளாவில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமமுகவில் டிடிவி தினகரனுக்கு பக்கபலமாக இருந்துவந்தார் தங்கதமிழ்ச்செல்வன் தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்ததிலிருந்து டிடிவி தினகரனுக்கும் தங்கதமிழ்ச்செல்வனுக்கும் கருத்து வேறுபாடு இருந்துவந்தது. தங்க தமிழ்ச்செல்வன் கட்சி மாறப்போவதாக கடந்த ஒரு வாரகாலமகாவே ஊகங்கள் வெளியாகிவந்தன. ஆனால், அதையெல்லாம் தங்கதமிழ்ச்செல்வன் மறுத்துவந்தார். இந்நிலையில் அமமுக நிர்வாகி ஒருவரிடம் தங்க தமிழ்ச்செல்வன் டிடிவி தினகரனை திட்டி பேசிய ஆடியோ வெளியாகி அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 
இதனையடுத்து தேனி மாவட்ட அமமுகவினருடன் ஆலோசனை நடத்தினார் டிடிவி.தினகரன். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “அவரிடம் எதுவும் பேசாதீங்க.. அப்படி பேசினால், உங்கள் இடத்துக்கு வேறு ஒருவரை நியமித்துவிடுவேன் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். இப்போதைக்கு அவருடைய இடத்துக்கு வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்துவிட்டோம்” என்று தெரிவித்தார். திமுக, அதிமுக என இரு தரப்புடனும் தங்க தமிழ்ச்செல்வன் பேசிவருவதாக தகவல் கிடைத்ததால், டிடிவி தினகரன் இந்த முடிவுக்கு வந்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


தங்க தமிழ்ச்செல்வனுக்கு பதிலாக வேறு ஆட்களை நியமிக்கப்போகிறோம் என தினகரன் கூறிவிட்ட நிலையில், தங்கதமிழ்ச்செல்வன் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இதுவரை வரவில்லை. இதற்கிடையே தங்கத்தமிழ்ச்செல்வன் கேரளாவில் முகாமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. முக்கிய அரசியல் கட்சியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துவிட்டால், பத்திரிகையாளார்களை அவர் சந்தித்து தன் அடுத்த கட்ட முடிவை அறிவிப்பார் என்று அவருக்கு நெருக்கமான ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

click me!